எட்டு வயதான ஒரு சிறுமிக்கு முழங்காலுக்கு கீழே ஏதோ தடிப்பு தடிப்பாக வந்தது. பிறகு அது வெடித்து புண்ணாக உருவாகிவிட்டது. தோல் மருத்துவரிடம் காட்ட, அவரும் மருந்து கொடுத்தார். சரியாகி விட்டது. பிறகு சிலநாட்கள் கழித்து கண் இமைகள் அருகில் பயங்கரமான ஊறல். சிறுமி கண்ணை கசக்கி, கசக்கி கண்களே சிவந்தது. அதற்கும் மருந்து வாங்கி போட்டார்கள் சரியானது.
அதற்கு பிறகு சில நாட்களில் அதிகமாக சளி பிடித்தது, மருந்தால் சரியானது. அதற்கு பிறகு சில நாட்களில் தொண்டை கம்மல், இளைப்பு போல மூச்சு வாங்கியது. அப்போதும் மருத்துவம்தான். அதே வீட்டில் 10 மற்றும் 5 வயதில் வேறு இரண்டு குழந்தைகளும் உண்டு. அவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை.
பிறகுதான் காரணம் தெரிந்தது. அந்த சிறுமி எட்டு வயது வரை. ஏனோ தானோவென்று நொறுக்கு தீனியையும், வெறும் சோற்றையும் மட்டும் சாப்பிடும் பழக்கம் உள்ளவள். காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவதே கிடையாது. மசாலா சேர்ந்த குழம்பு கூட அவளுக்கு கொஞ்சம் அலர்ஜிதான். அவள் தாத்தா பாட்டியின் செல்லப்பிள்ளை. அதற்கு பிறகு தந்தை ஒருநாள் குச்சியை கொண்டு வெளுத்து விட்டார். சிறுமியைத்தான்.
அந்த சிறுமிக்கு வந்த எந்த ஒரு வியாதியும் கிருமி தொற்றால் வரவில்லை. ஊட்டச்சத்து குறைபாட்டால், வைட்டமின்கள் சரியாக கிடைக்காததால் வந்த வியாதிகள். அப்படியான வியாதிகளுக்கு வெறுமனே அறிகுறிகளை கொண்டு, அந்த அறிகுறிகளை மறைக்கும் விதமாக மட்டுமே வைத்தியம் செய்தால், அந்த உடல் வேறு ஒரு பிரச்சனையை கிளப்பும். அது கலகம் செய்யும். அப்படியான நேரத்தில் நாம் மூலப்பிரச்சனை எங்கே இருக்கிறது என்று மட்டுமே கண்டறிய வேண்டும்.
இப்போது இருக்கும் பெரும்பான்மையான நோய்கள் நோய்களே அல்ல. அவை நமது உணவுமுறையில் உருவான தவறான மாறுபாடுகளால் வந்த சிக்கல்கள். உணவு முறையை சரி செய்துவிட்டால் அவை தானாகவே சரி ஆகிவிடும். அப்படியான நோய்களுக்கு மருத்துவம் உதவாது. உதவவும் முடியாது.
நமது அரசின் "மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் 1940" ல் "பகுதி J" என்ற ஒரு பிரிவு உள்ளது. அதன் படி 51 வியாதிகள் எந்த ஒரு மருந்தாலும் குணப்படுத்த முடியாதவை என்று வரையறுக்கப்பட்டுள்ளன. அந்த வியாதிகளை இந்த மருந்து குணப்படுத்தும் என்று எந்த ஒரு மருத்துவரும், அல்லது மருந்து கம்பெனியும் மருந்து தயாரித்து விற்பதோ, அல்லது மருத்துவம் செய்வதோ சட்டப்படி குற்றம் என்று அந்த சட்டம் சொல்கிறது.
எய்ட்ஸ், நெஞ்சுவலி, குடல்வால் நோய், ரத்த குழாய்களில் அடைப்பு, வழுக்கை, கண்பார்வையற்ற நிலை, ஆஸ்த்மா, புற்றுநோய், கண்புரை, நரை, முடி கொட்டுதல், மரபணு கோளாறுகள், காது கேளாமை, சர்க்கரை நோய், வலிப்பு நோய், மூளைக்காய்ச்சல், தோல் நிறமூட்டுதல், க்ளாக்கோமா, தைராய்டு, குடலிறக்கம், ரத்த அழுத்தம், விரைவீக்கம், பைத்தியம், மறதி, குழந்தை வளர, ஆண் உறுப்பு வளர்ச்சி, கிட்ட பார்வை, தூரப்பார்வை, கர்ப்பப்பை சார்ந்த நோய்கள், மஞ்சள் காமாலை, கல்லீரல் சார்ந்த நோய்கள், வெண் குஷ்டம், மாரடைப்பு, பக்கவாதம், உடல் மெலிய, நரம்புத்தளர்ச்சி, மூலம், ருமாட்டிக் இருதய நோய், சொப்பன ஸ்கலிதம், முதுகுத்தண்டு பிரச்சனைகள், திக்குவாய், சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள், இளநரை, மற்றும் கால் ரத்த நாளங்கள் வீக்கம் (வெரிகோஸ் வெய்ன்).
என்ன மொத்த வியாதிகளையும் படித்து விட்டீர்களா? படிக்கவில்லை என்றால் நன்றாக படிக்கவும்.
கிட்டத்தட்ட நமக்கு தெரிந்த முக்கால்வாசி வியாதிகள் இதில் இருக்கின்றன. இந்த பட்டியல் உண்மையென்றால், நம்மிடம் காய்ச்சல், தலைவலி, வயிற்றுவலி போன்ற கொசுறு பிரச்சனைகளுக்கு மட்டும்தான் சரியான மருந்துகள் இருக்கின்றன என்று அர்த்தம்.
இந்த பட்டியலை தயார் செய்தது யாரோ ஒரு அரைகுறை மருத்துவர் இல்லை. நமது இந்திய மருத்துவ அமைச்சகம். அதன்படி நாம் பார்க்கின்ற பல வியாதிகளுக்கு இன்று மருந்து என்பதே கிடையாது. சர்க்கரைவியாதி, புற்றுநோய், மாரடைப்பு, ரத்த அழுத்தம், ஆஸ்த்மா, சிறுநீரக கற்கள், மஞ்சள் காமாலை போன்ற பெரிய வியாதிகள் எல்லாம் இதில் அடக்கம்.
இந்த அறிக்கை வெறும் ஆங்கில மருத்துவத்தை மட்டும் ஆதாரமாக கொண்டு தயார் செய்யப்பட்டதா? அல்லது சித்த மருத்துவம், ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய முறைகளையும் சேர்த்து சொல்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். நோய் வந்த பிறகு வைத்தியம் செய்துகொள்ளலாம் என்று இருக்கவே கூடாது. வராமலே பார்த்துக்கொள்வதுதான் சிறப்பு. "உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே" என்ற பாணியே சரி.