பாரம்பரிய மருத்துவத்தில் உப்புக்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்த பொருளாகும். இவற்றில் இயற்கையாக கிடைத்தவையும் உண்டு. செயற்கையாக தயாரிக்கப்பட்டவையும் உண்டு. சித்தர்கள் மொழியில் உப்புக்கள் என்பவை உலோகங்கள் அமிலத்துடன் சேர்ந்து உருவானவை, தாவரங்களில் இருந்து கிடைத்த கரிம மூலகங்கள் என வெவ்வேறு வகையில் இருக்கின்றன.
பொதுவாக எல்லா உப்புக்களும் நெருப்பில் எரிந்து போகிறவை. தண்ணீரில் கரைந்து போகிறவைதான். இருப்பினும் சூடன், பச்சைக்கற்பூரம் போன்ற சில உப்புக்கள் தண்ணீரில் கரைய கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளும். இயற்கை உப்புக்கள் பத்தும், செயற்கை உப்புக்கள் பதினைந்தும் பற்றிய குறிப்புகள் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
சூடன், சீனம், பூநீறு, வளையலுப்பு, பச்சைக்கற்பூரம், கல்லுப்பு, கரியுப்பு, பொன்னம்பர், மீனம்பர், கடல்நுரை போன்றவை இயற்கை உப்புக்கள். வளையலுப்புக்கு வயலுப்பு என்ற பெயரும் உண்டு. கடல்நுரையை குருவி, குயில் போன்ற பறவைகள் கூட உணவாக கொள்கின்றன. பொன்னம்பரின் விலை தங்கத்திற்கு நிகரானது.
பருதியே பத்துவகை பண்பை கேளு
பாங்கான சூடனொடு சீனந் தானும்
வருதியே பூநீறு வளைய லுப்பு
மணமாகும் பச்சைக்கற்பூர மாகும்
புருதியே கல்லுப்பு காரியுப்போடு
பொன்னம்பர் மீனம்பர் நுரையு மாமே
என்ற பாடல் போகர் 7000ல் வருகிறது. இது அந்த பத்து வகை இயற்கை உப்புக்களையும் பற்றி கூறுகிறது.
செயற்கை உப்புக்களாவன, இந்துப்பு, பொட்டிலுப்பு, வெண்காரம், துருசு, எவச்சாரம், நவச்சாரம், சத்திச்சாரம், ஏகம்பசாரம், கெந்தி உப்பு, திலாலவனம், கெந்தி லவணம், காய்ச்சுலவணம், பிடாலலவணம், சிந்து லவணம், காசி லவணம் ஆகிய பதினைந்தும் ஆகும்.
இந்த உப்புக்கள் தவிர முப்பதுக்கும் மேற்பட்ட பாஷாணங்களும், நூற்றுக்கும் மேற்பட்ட உபரசங்களும் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.