Ayurveda

மருந்து செய் கருவிகள் - பாகம் 2

சித்த மருந்து செய்முறையில் பயன்படுத்தப்படும் கருவிகள் சிலவற்றை பற்றி கடந்த கட்டுரையில் கண்டோம். வேறு சில கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.

1. புடம் - இது வறட்டியின் உதவியால் எரிக்கப்படும் எரிப்பு திட்டம். தேவையான வெப்பத்தின் அளவை பொறுத்து ஒன்று முதல் அதிக எண்ணிக்கை வரையிலான வறட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வறட்டிகளின் எண்ணிக்கையை பொறுத்து இது ஏழு வகைப்படும்.

காடைப்புடம் - ஒரு வறட்டி
கௌதாரிப் புடம் - மூன்று வறட்டி
சேவல் புடம் - பத்து வறட்டி
பன்றிப்புடம் - ஐம்பது வறட்டி
மணல் மறைவுப்புடம் - தொண்ணூறு வறட்டி
யானைப்புடம் - ஆயிரம் வறட்டி
பூமிப்புடம் - நான்கு விரட்கிடை நீளமுள்ள ஆட்டின் வறட்டி

விள்ளுகிறேன் புடபாகம் செப்பக் கேளாய்
   மேலான காடையொன்று கௌதாரி மூன்று
தள்ளுவரோ குக்குடமோ ஏறுவீ ரைந்து
   சதுரமாம் வராகபுடம் ஐம்ப தாகும்
ஊள்ளபடி கெஜ புடந்தா னீரைந் நூறு
   உத்தமனே மணல் மறைக்காம் ருத்தொண்ணூறே
அள்ளவே பூப்புடத்து கெருவைக் கேளாய்
   ஆட்டினொரு நான்குவிரற் கிடைதானாமே

என்ற பாடல் மேற்கண்ட ஏழு வகை புடங்களையும் பற்றி சொல்கிறது.

இவை அனைத்தும் நெருப்பில் வைத்து புடம் போடப்படும் வழிமுறைகள். இவை தவிர நெருப்பில் வைக்கப்படாத முறைகளான உமிப்புடம், தானியப்புடம், சூரியப்புடம் போன்ற பல முறைகளும் உண்டு.

2. அடுப்பு - மருந்து பொருள்களை எரிக்கவும், பஸ்ப செந்தூரங்களை செய்யவும் அடுப்பு பயன்படுகிறது. அமைப்பை பொறுத்து அடுப்பு நான்கு வகைப்படும்.

    a. குமுட்டி அடுப்பு - அடுப்பின் மேல் விளிம்பில் மூன்று குமிழ்கள் இருக்கும். வைக்கப்படும் பாத்திரத்தின் நான்கு புறமும் நெருப்பு எரியும் படியான அடுப்பு.

    b. சக்கர அடுப்பு - இதில் குமிழ் இல்லாமல் வாய் வட்டமாக இருக்கும். பாத்திரத்தின் அடிப்பகுதியில் மட்டும் நெருப்பு எரியும் படியான அடுப்பு.

    c. புகைபோக்கி அடுப்பு - சக்கர அடுப்பில் புகைபோக்கி அமைப்பு இணைக்கப்பட்டது. இதனால் விறகு முழுமையாக எரியும்.

    d. உலை அடுப்பு - நிலத்தில் குழி தோண்டி, துருத்தி மூலம் ஊதியவாறு பொருள்களை எரிக்க உதவும் அடுப்பு. மற்ற அடுப்புகளை காட்டிலும் எளிதில், எங்கும் இதை உருவாக்கி பயன்படுத்தலாம்.

3. துருத்தி - இது உலை அடுப்பில் எரியும் கரியில் காற்று ஊதி நன்றாக எரிய வைக்க பயன்படுகிறது. இதில் இரண்டு வகை உண்டு. முழு ஆட்டுத்தோலால் செய்யப்பட்ட ஒற்றை துருத்தி முதல் வகை. கன்றின் தோலால் செய்யப்பட்ட இரண்டு துளைகள் கொண்ட இரட்டை துருத்தி இரண்டாவது வகை. இவை தவிர கையால் சுற்றக்கூடிய இயந்திரம் கொண்ட இரும்பாலான துருத்திகளும் உள்ளன.

தேவைப்படும் வெப்பத்திற்கேற்ப, செய்யப்படும் வேலைக்கு ஏற்ப ஒரு துருத்தியோ அல்லது பல துருத்திகளோ பயன்படுத்தலாம்.

4. உரல் - கருங்கல், இரும்பு அல்லது வெண்கலத்தால் செய்யப்பட்டது. மருந்துப்பொருள்களை இடித்து தூளாக்க பயன்படுகிறது.

5. உலக்கை - உரலில் மருந்து பொருள்களை இட்டு இடிக்க பயன்படும் கம்பு உலக்கை ஆகும். ஒரு முனை கூராகவும் மறுமுனை சமமாகவும் இருக்கும். பெரும்பாலும் இது வைரம் பாய்ந்த மரத்தாலோ, அல்லது இரும்பாலோ செய்யப்பட்டிருக்கும். மரத்திலும் பெரும்பாலும் புளிய மரத்தின் கட்டை பயன்படுத்தப்படும்.

இவை தவிர அரைத்த பொடிகளை சலிக்க உதவும் சல்லடை, கொதிக்கும் பொருளை வடிகட்ட உதவும் துணியாலான வடிக்கருவி, பானையை இறக்கி வைக்க உதவும் வைக்கோல் பிரிமனை, கண் அகப்பை, மத்து என பல கருவிகள் உண்டு. கருவிகளுடன் சில எரிபொருட்களும் மருந்து செய்முறையில் பயன்படுத்தப்படுகின்றன. அவையாவன.

1. வறட்டி - பசு மாட்டின் சாணம் காய்ந்து எரிபொருளாக கிடைக்கிறது. இதுவே இயற்கை வறட்டி. இது மேலானது. இவை தவிர பன்னிரு அங்குல நீள அகலமும், அரை அங்குல கணமும் உள்ளதாக பசுஞ்சாணத்தை தட்டி காயவைத்து செயற்கை வறட்டி தயார் செய்யலாம். பொதுவாக வறட்டி எழுபது கிராம் எடை கொண்டதாக இருக்கவேண்டும். பசு மாட்டின் சாணம் உத்தமம். ஆட்டு சாணம் மிக உத்தமம். மற்ற சாணம் கூடாது.

2. விறகு - இவை மரக்குச்சிகள் தான். எந்த தோஷம் சார்ந்த வியாதிக்கு மருந்து தயார் செய்யப்படுகிறது, மருந்தில் சேர்க்கப்படும் பாஷாணத்தின் தன்மை போன்றவற்றை பொறுத்து வெவ்வேறு வகையான விறகு குச்சிகளை பயன்படுத்த வேண்டும்.

வாத தோஷம் சார்ந்த மருந்துகளுக்கு நுணா, வன்னி, மாவிலங்கம், வாகை போன்ற விறகுகளும், பித்த தோஷம் சார்ந்த மருந்துகளுக்கு நெல்லி, இலந்தை, வேம்பு, விளா மரக்குச்சிகளும், கப தோஷம் சார்ந்த மருந்துகளுக்கு உசிலம், கொன்றை, வேங்கை போன்ற விறகுகளும் பயன்படுத்தப்பட வேண்டும்.

இவை தவிர இரசம் சேர்ந்த மருந்துகளுக்கு வேம்பு, பனை, தென்னை போன்ற விறகுகளும், இரும்பு சேர்ந்த மருந்துகளுக்கு வேல், வேங்கை போன்ற விறகுகளும் பயன்படுத்தப்பட வேண்டும்.

3. கரி - பாதியளவு எரிந்த மரக்கட்டையை துருத்தி உபயோகித்து மருந்து செய்ய பயன்படுத்துவர். சில உலோகங்களை பஸ்பமாக்கவும், செந்தூரமாக்கவும் கரி, துருத்தி பயன்படுத்த வேண்டும்.