"நாற்பது வயதுக்கு மேல் எலும்புகள் பலவீனமாகின்றன. அந்த பலவீனத்தை ஈடுகட்ட இதை குடிங்க" என்று விளம்பரத்தில் சொல்வார்களே. அந்த வயதாவதால் வரும் பலவீனத்தை குறைக்க உதவும் சித்த மருந்துகளில் ஒன்று தான் அஸ்வகந்தா லேகியம்.
அஸ்வகந்தா லேகியம் அமுக்கரா கிழங்கு, சர்க்கரை, பசுநெய் கொண்டு பழங்கால சித்த மருத்துவ முறைப்படி தயாரிக்கப்படுகிறது. அமுக்கரா கிழங்கும், சர்க்கரையும் அதிகளவில் இருந்தாலும் திராட்சை, பேரிச்சை, சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலி, கிராம்பு, ஜாதிக்காய், கோரைக்கிழங்கு போன்ற வேறு பல பொருட்கள் பெயரளவிற்கு சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது.
இதை தொடர்ந்து எடுத்துக்கொள்வதால், உடலின் எலும்புகளும், தசைகளும் பலப்படுகிறது, உடலுக்கு வீரியம் அளிக்கிறது. நல்ல தூக்கத்தை வரவழைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. விந்தணு உற்பத்தியை அதிகரிக்கிறது. நரம்பு தளர்ச்சியை சரி செய்கிறது. பாண்டு என்றழைக்கப்படும் ரத்தசோகையை சரி செய்கிறது. பசியை தூண்டுகிறது.
நரம்பு தளர்ச்சி, தசைகளின் பலவீனம், வீரியக்குறைவு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற பலவும் வயதாக ஆக வரக்கூடிய பிரச்னைகள்தான்.
பொதுவாக எந்த ஒரு லேகியதிலும் சர்க்கரை, கருப்பட்டி போன்ற இனிப்பு சுவைகொண்ட பொருட்களும், பசு நெய்யும் அதிகளவில் இருக்கும். சர்க்கரை அதிகளவில் சேர்க்கப்படுவதால், சர்க்கரை நோயாளிகள் மருத்துவருடைய அறிவுரைக்கு பின் எடுத்துக்கொள்ளவும்.