நமது நாட்டின் ஆதிப்பழங்குடியினர் இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்த, தமிழை தாய் மொழியாகக் கொண்ட நாகர்கள் என்று அம்பேத்கர் கூறுகிறார். நமது நாட்டின் கோவில்களில் பிணைந்திருக்கும் பாம்புகள் கொண்ட சிலைகள் இருக்கின்றன. அந்தவகையில் பார்க்கும் பொழுது, இந்த பாம்புகள் பின்னிப்பிணைந்த காடூசியஸ் சின்னம் இந்திய பாரம்பரிய மருத்துவத்தை சார்ந்ததாக தெரிகிறது.
அம்பேத்கர் சொன்னதை உறுதிப்படுத்தும் விதமாக பின்னிப்பிணைந்த பாம்புகளுடன் இருக்கும் அசோகர் காலத்து நாணயங்களும் அகழ்வாராச்சியில் நமக்கு கிடைத்துள்ளன. அதோடு கூட பின்னிப் பிணைந்த பாம்புகளையும், நடுவில் இருக்கும் தடியையும் சரியாக விளக்கும் விதமான பாடல்களும் நமது சித்தர் ஏடுகளில் இருக்கின்றன.
இதோ இந்தப்பாடலை பாருங்கள்.
பரிசான இடையினொடு பிங்கலையு மொக்க
பயின்றதோர் குதத்தினடி மூலம் பற்றிச்
சுரிசான பாகங்கண் மாறி மாறிச்
சுழிமுனையின் தன்னோடு நெட்டிட்டேறும்
திரிசான திருவனைக்கால் போலே மாறிச்
சிரசளவு தான்முட்டித் திரும்ப மீண்டு
விரிவான மூக்குநடுப் புருவ நெற்றி
மீண்டுமே திரும்பி அந்த மூலம் புக்கும்
இடகலையும் பிங்கலையும் மூலாதாரத்திலிருந்து சுழுமுனையின் இடமும் வலமும் ஒன்றாக கிளம்பி, மாறி மாறி பின்னி சிரசுவரை சென்று, பின் புருவ நெற்றி பொட்டில் உச்சமாகி, பின் திரும்பி அப்படியே மூலாதாரம் வந்து சேரும் என்று கூறுகிறது இந்தப் பாடல். இந்தப்பாடலின் விளக்கம் காடூசியஸ் சின்னத்திற்கு மிக சரியாக பொருந்துகிறது. மேலிருக்கும் இறக்கைகள், மூச்சை கட்டுப்படுத்தி சரியாகப் பயின்ற யோகி பறக்கலாம் என்று கூறுகிறது.
வாதம், பித்தம், கபம் என்ற இந்த மூன்று நாடிகளே நமக்கு தெரிந்தாலும் உண்மையில் அவற்றுக்குள் இருக்கும் உபநாடிகள் பத்து. இடகலை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி, அத்தி, சிகுவை, அலம்புருடன், குகு, சங்குனி, அலம்புடை என்ற வைரவன். இதில் இருக்கும் இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்றும் வாதநாடியில் அடங்கும், காந்தாரி, அத்தி, சிகுவை, அலம்புருடன் ஆகிய நான்கும் பித்த நாடியில் அடங்கும். மற்ற மூன்றும் கப நாடியை சேர்ந்தவை.
பத்து நாடிகள் இருந்தாலும் அதில் இடகலை, பிங்கலை, சுழுமுனை மூன்றும் முக்கியமானதாக கண்டிருந்தனர் நமது முன்னோர்கள். அப்படியே அந்த வாதம், பித்தம், கபம் மூன்றில் வாதநாடியை பிரதானமாக கண்டறிந்தனர். நாமே சோதித்தாலும் கூட வாதநாடியின் துடிப்பில் பாதியே பித்த நாடியின் துடிப்பு. அந்த வாதநாடி காற்றை பிரதானமாக கொண்டது. அப்படியே பாம்பும் காற்றை பிரதானமாக கொண்டு வாழ்கிறது.
ஒரு பாம்பை அரைகுறையாக அடித்து, தலையை நசுக்காமல் விட்டுவிட்டால் வெறும் காற்றை மட்டுமே உணவாகக் கொண்டு, தன் காயங்களை சரியாக செய்து பின் கிளம்பி சென்றுவிடும். அது போலவே தவத்தில் பாதி தூரம் கடந்த யோகிகள் முதலில் உணவை மறுத்து தண்ணீரை மட்டும் உண்டு தவம் புரிவார்கள். பிறகு தண்ணீரையும் துறந்து, காற்றை மட்டுமே உணவாக கொண்டு இடைவிடாத தவம் புரிவார்கள். அதனால்தான் அவர்களால் பல்லாண்டுகாலம் இடைவிடாத தவம் புரிய முடிந்தது.
உடலின் பிரதான விஷயமாக காற்றை கண்டறிந்து, அந்த காற்றை கட்டுப்படுத்தி சீரமைக்க பிராணாயாமத்தை உருவாக்கி, காற்றையும் பிரணாயாமத்தையும் உருவப்படுத்தி காட்ட பாம்பை பற்றி புரிந்துகொண்டு, அப்படியே பிராணாயாமத்தின் மூலம் ஆன்மீகத்தில் முக்தியை நோக்கி பயணம் செய்யலாம் என்று கண்டறிந்தவன் எவ்வளவு பெரிய ஞானியாக இருப்பான்? ஆனால் அப்படிப்பட்ட ஞானியர் பரம்பரையில் வந்த நாமோ அவற்றை பயன்படுத்தவும்தவறி, பாதுகாக்கவும் தவறி, காடூசியஸ் என்ற வெள்ளைக்காரன் கண்டுபிடித்த வார்த்தையை வைத்து அதை அழைக்கிறோம். உண்மையில் இந்த சின்னம் நமது பாரம்பரிய மருத்துவத்தின், இந்திய கலாச்சாரத்தின் பொக்கிஷம்.
(பின் குறிப்பு: இப்போதுவரை நாங்கள் செய்த ஆராச்சியில் இந்த சின்னத்திற்கு என்று தமிழிலோ அல்லது சமஸ்கிருதத்திலோ பெயர் எதுவும் இல்லை. ஒருவேளை அது எங்கள் கண்ணில் படாமல் இருக்கலாம்.)