குமிழ் வேர் " >
Ayurveda

ஆயுர்வேதம் தந்த தசமூலம் - பாகம் 2

குமிழ் வேர்

குமிழ் என்று தமிழிலும், Melina என்று ஆங்கிலத்திலும், Gambhari என்று சமஸ்கிருதத்திலும் அழைக்கப்படும் இந்த மரத்தின் பழமும், வேர் பட்டையுமே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதன் தாவரவியல் பெயர் Gmelina Arborea.

இதன் வேர் கஷாயம் அஜீரணம், வயிற்று உப்புசம், தலைசுற்றல், பசியின்மை, காய்ச்சல், அதி தாகம், பால்சுரப்பு குறைவு போன்ற சாதாரண பிரச்சனைகள் முதல் சிபிலிஸ், ருமாட்டிசம் போன்ற பெரிய பிரச்சனைகள் வரை சரி செய்கிறது. மேலும் இது நினைவுத்திறனை மேம்படுத்துகிறது.

பெருவாகை வேர்

பெருவாகை என்று தமிழில் அழைக்கப்படும் இந்த மரம் வாகை குடும்பத்தை சேர்ந்தது. இதற்கு பேய்மரம், அச்சி, வங்கமரம், தூங்குமூஞ்சி மரம் என்று வேறு சில பெயர்களும் தமிழில் உள்ளன. இதன் சமஸ்கிருதப் பெயர் Shyonak. இதன் தாவரவியல் பெயர் Oroxylyum Indicum.

இதில் இருக்கும் வேதிப்பொருட்கள் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்தாகவும், இருமல் எதிர்ப்பியாகவும், வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சலை குணப்படுத்தவும், சளி, இருமல், தொண்டைவலி, தொண்டை அழற்சி போன்ற நுரையீரல் பாதை சார்ந்த பிரச்சனைகளுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப் படுகிறது. மேலும் இதன் வேர் கஷாயம் கல்லீரலை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது வாதம் சார்ந்து மட்டுமல்லாது பித்தம், கபம் சார்ந்தும் இயங்குகிறது. ஆகவே இது காமாலைக்கு மருந்தாக கூட பயன்படுத்தப் படுகிறது.

பாதிரி வேர்

பாதிரி என்று அழைக்கப்படும் இந்த மரம் Patala என்ற சமஸ்கிருதப் பெயரில் தசமூலக் குடிநீரில் பயன்படுத்தப்படுகிறது. இது கன்னி, பாடலி, புன்காலி என்ற வேறு பெயர்களிலும் தமிழில் அழைக்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் Stereospermum Suaveolens.

இது பொதுவாக மதுமேகம், கரப்பான், புண்கள், மூலம், சொறி, அக்னிமாந்தம், கல்லீரல் பிரச்சனைகள் போன்ற வியாதிகளை குணப்படுத்துவதாக பழைய நூல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது வலிநீக்கியாகவும், காய்ச்சலை குணப்படுத்தவும், வீக்கங்களை குறைக்கவும், நீரிழிவு, வயிற்றுப்புண், உடல்பருமன் போன்றவற்றை குணப்படுத்துவதாக நவீன ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. காயங்களை குணப்படுத்துதல், வீக்கங்களை குறைத்தல் போன்றவற்றின் மூலம் உடலில் இருக்கும் நச்சுக்களை இது வெளியேற்றுகிறது.

இதுவரை சொல்லப்பட்ட அனைத்தும் பெருபஞ்சமூலம் என்று குறிப்பிடப்படும் மரத்தின் வேர்கள். இதுபோல சிறுபஞ்ச மூலம் என்று சொல்லப்படும் ஐந்து செடியின் வேர்களும் தசமூலக்குடிநீரில் அடங்கும்.

மூவிலை வேர்

மூவிலை, புள்ளடி, சிறுபுள்ளடி, கடமாறி என்று தமிழிலும், Salaparni என்று சமஸ்கிருதத்திலும் அழைக்கப்படும் இது இந்தியாவின் மலைப்பிரதேசங்களில் வளரும் ஒரு சிறு செடி. இதன் தாவரவியல் பெயர் Hedysarum Gangetieum, Desmodium Gangetium.

இது காய்ச்சல், பித்தம், செரிமான பிரச்சனைகள், உடல்வலி, இருமல் போன்றவற்றை குணப்படுத்தவும், நுண்ணுயிர் எதிர்ப்பியாகவும், வீக்கங்களை குறைக்கவும், இதயம் மற்றும் கல்லீரலை பாதுகாக்கவும், குடல் புழுக்களை கொல்லவும், ஆக்ஜிசனேற்ற தடுப்பானாகவும் பயன்படுகிறது.

மற்ற தசமூலக்குடிநீர் வேர்களை காட்டிலும் இது அதிகமான அளவில் ஆரோக்கியம் பேணுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. மற்றவை நோய்களை சரிசெய்வதற்கான பயன்படுத்தப்படுகின்றன.

நோய்களை குணப்படுத்துவதும், ஆரோக்கியம் பேணுவதும் ஒன்றுதானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இரண்டும் வேறுவேறு. ஆரோக்கியம் பேணுதல் என்பது வருமுன் காப்போம் என்ற நேர்மறை சிந்தனையில் வந்த ஒரு நடைமுறை. ஆனால் நோய் வந்த பிறகு அவற்றை குணப்படுத்துவது நோயை பொறுத்து நம்முடைய வாழ்க்கை முறையை மாற்றி கொள்கிற ஒரு எதிர்மறை கண்ணோட்டத்திலான நடைமுறை.

இதயம் மற்றும் கல்லீரலை பாதுகாக்கும் தன்மைகள், ஆக்ஜிசனேற்ற தடுப்பு குணங்கள் போன்றவை ஆரோக்கியம் பேணுகின்ற இந்த மூலிகையின் செயல்பாடுகள்.

- தொடரும்