தசமூலம் என்ற ஒரு முக்கியமான மருந்து ஆயுர்வேதத்திலும், சித்த மருத்துவத்திலும் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. தச + மூலம் = தசமூலம், பெயருக்கேற்ப பத்துவகையான மூலிகைகளின் வேர்களின் பட்டைகளில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு கூட்டு மருந்து தான் தசமூலம். இந்த பத்து வகையான வேர்களும் சூரணமாக, லேகியமாக, தைலமாக, கஷாயமாக, அரிஷ்டமாக பல்வேறு நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன.
பல்வேறு வகை நோய்களை குணப்படுத்தினாலும், பெரும்பாலும் ஆஸ்த்மா, இருமல், இளைப்பு போன்ற சுவாசம் சார்ந்த பிரச்சனைகளை சரி செய்வதற்கும், வாதம் சார்ந்த தீராத பிரச்சனைகளை சரி செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. பக்கவாதம், முடக்கு வாதம், வர்ம பிரச்சனைகள் போன்ற பிரச்சனைகள் பலவற்றின் சிறந்த நிவாரணியாக பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவர்கள் பலர் தசமூலத்தை பயன்படுத்துகின்றனர்.
பத்து வகையான வேர்களில் ஐந்து மரத்தின் வேர்கள் பெரும்பஞ்ச மூலம் என்றும், மீதம் ஐந்து செடியின் வேர்கள் சிறுபஞ்சமூலம் என்றும் அழைக்கப்படுகின்றன. வில்வ வேர், தழுதாழை வேர், பாதிரி வேர், குமிழ் வேர், பெருவாகை வேர் ஆகிய ஐந்து மரங்களும் பெரும்பஞ்ச மூலம். ஓரிலை, மூவிலை, முள்ளுக்கத்தரி, கண்டங்கத்திரி, நெருஞ்சில் ஆகிய ஐந்து செடிகளும் சிறுபஞ்சமூலம். இந்த சிறுபஞ்சமூலம் ஐந்து வேர்களை கொண்டு அருமருந்தாக செயல்படுகிறது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக ஐந்து நீதிகளை ஒவ்வொரு பாடலிலும் சொல்லும் சிறுபஞ்சமூலம் என்றொரு நூல் சங்க இலக்கியத்தில் இருக்கிறது.
பொதுவாக ஒரு நோயைக் குணப்படுத்தும் பண்புகள் இருக்கும் பல மூலிகைகளை எடுத்து தனித்தனியாக நோயாளிக்கு கொடுப்பதை விட, அவை அனைத்தையும் மொத்தமாக எடுத்து, சுத்தி செய்து, சூரணமாக்கி, தேவையான விகிதத்தில் கலந்து லேகியமாகவோ, கஷாயமாகவோ செய்து நோயாளிக்கு கொடுக்கும் பொழுது அது மிக நன்றாக வேலை செய்யும். அதில் எத்தனை அதிகமான, வீரியமான மூலிகைகள் சேர்க்கப்பட்டுள்ளனவோ அதற்கேற்ப அந்த மருந்து சிறப்பாக வேலை செய்யும்.
உதாரணமாக, நுரையீரல் மற்றும் சளி சார்ந்த பிரச்சனைகளுக்கு தூதுவளை, கண்டங்கத்திரி, துளசி போன்ற மூலிகைகளை சேர்த்து செய்யப்படும் லேகியங்கள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும். ஏனெனில் துளசி, தூதுவளை, கண்டங்கத்தரி போன்ற அனைத்திலும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளை சரிசெய்யும் பண்புகள் அதிகம் உள்ளன. கபசுரக் குடிநீர் கூட இப்படி ஒரு மருந்துதான். கபம், வாதம் சார்ந்த பிரச்சனைகளை குணப்படுத்தும் பண்புகள் கொண்ட பல மூலிகைகள் அதில் உண்டு. அது போல, வாதம் சார்ந்த பல பிரச்சனைகளை அவற்றின் காரணத்தை கண்டறிந்து குணப்படுத்தும் பண்புகள் இந்த தசமூலத்தின் பத்து வேர்களிலும் இருக்கின்றன.
வில்வ வேர்
வில்வம் என்று தமிழிலும், Bilva என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படும் இது சிவன் கோவில்களில் பெரும்பாலும் இருக்கும் மரம். இதற்கு தமிழில் குசாபி, கூவிளம், நின்மலி, சிவத்துருமம் என்ற வேறு பெயர்களும் உண்டு. இதன் தாவரவியல் பெயர் Aegle Marmelos.வில்வ வேர் கஷாயம் காய்ச்சல், பய உணர்வு, சீரற்ற இதயத் துடிப்பு, கவலை, வயிற்றுப்போக்கு, வாயுத்தொல்லை போன்றவற்றை போக்குவதாக நமது சித்தர்கள் கூறுகிறார்கள்.
காய்ச்சல், அஜீரணம், பசியின்மை, உடல்வலி, மற்றும் அது சார்ந்த வயிற்றுப்போக்கு அனைத்தும் வாதநாடியின் சீரற்ற தன்மையினால் வருவதாக நமது பாரம்பரிய மருத்துவம் கூறுகிறது. உடலுக்குள் நுழைந்த ஒரு நோய்க்கிருமி, அதை எதிர்த்து போராடும் நமது உடல், அதனால் அதிகரிக்கும் உடல் வெப்பநிலை, அதோடு கூடிய சீரற்ற ஜீரண மண்டல செயல்பாடுகள் போன்றவை போன்றவை காய்ச்சலின் வெளிப்புற அடையாளங்கள் என்றாலும் இவை அனைத்தும் அந்த கிருமியோடும், வாத நாடியோடும் சம்பந்தப்பட்டவை. அப்படிப் பார்க்கும் பொழுது, வாதநாடியை சரிப்படுத்த காய்ச்சலும் அது சார்ந்த வாதப் பிரச்சனைகளும் சரியாகும்.
தழுதாழை வேர் Or முன்னை வேர்
தழுதாழை வேர் அல்லது முன்னை வேர் ஆகிய இரண்டும் Agnimantha என்ற ஆயுர்வேத பெயரில் பெருபஞ்ச மூலத்தில் பயன்படுத்த படுகிறது. தழுதாழைக்கு வாதமடக்கி, தக்காரி, நந்தக்காரி என்று வேறு சில பெயர்கள் தமிழில் இருக்கின்றன. தழுதாழையின் தாவரவியல் பெயர் Clerodendrum Phlomidis. இதன் தமிழ்ப் பெயரே இது வாதம் சார்ந்த ஒரு மூலிகை என்பதை நமக்கு தெளிவு படுத்துகிறது. தழுதாழையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் பல்வேறு வாதப்பிடிப்புகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. மேலும் காய்ச்சல், உடல்வலி, இளம்பிள்ளை வாதம், பக்கவாதம் போன்றவற்றையும் இது சரி செய்கிறது.
தழுதாழைக்கு பதிலாக முன்னை வேர் என்றொரு மூலிகையும் தசமூலத்தில் ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது. இந்த முன்னை, அரணி, வைசயந்தி என்ற வேறு பெயர்களிலும் தமிழில் அழைக்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் Premna Obtusifolia, Premna Interyfolia. இதன் வேர் கஷாயம் வாத ஏப்பம், பிரமேகம், தலைநோய்கள், மற்ற வாத நோய்களை குணப்படுத்துகிறது. ஒரு குறிப்பிட்ட வியாதிக்கு இருவேறு மருந்துகள் கொடுக்கப்படுவதை போல இந்த Agnimantha என்ற ஆயுர்வேதப் பெயரில் தழுதாழை வேர் அல்லது முன்னை வேர் பயன்படுத்தப் படுகிறது.
- தொடரும்