ஆதிகாலத்திலிருந்தே மனிதன் பயன்படுத்த கூடிய உலோகங்களில் தங்கமும் ஒன்று. இது மிக நுண்ணிய பொடிகளாக பாறைகளுடன் கலந்து கிடைக்கிறது. ஆனால் உலோக கலவையாக அல்ல. ஏனெனில் தங்கம் மற்ற எந்த வேதிப்பொருளுடனும் எளிதில் வினைபுரியாது. மணலுடன் சேர்ந்த தங்கப்பொடிகளை தண்ணீரில் ஓடவிடுவதன் மூலம் பிரித்து எடுக்க வேண்டும்.
சுத்தம் செய்யப்படாத தங்கத்தை, சிறு சிறு துண்டுகளாக்கி, புளி நீரால் கழுவ வேண்டும். பிறகு உப்பு, கந்தகியும் கலந்த செங்கல் பொடியில் இட்டு புரட்டி, பின் அதை காற்றின் உதவியுடன் பலமணி நேரம் புடமிட வேண்டும். இப்படியே 41 முறை புடமிட்டால், அந்த தங்கம் சுத்தமான பத்தரை மாற்று தங்கமாக கிடைக்கும்.
புடமிடுவதே பலமணி நேரமாம். பிறகு அதையும் 41 முறை செய்ய வேண்டுமாம். எவ்வளவு பெரிய வேலை. தற்போது தங்கத்தின் தரத்தை காரட் முறையில் அளப்பதை போல, அந்தக் காலத்தில் இருந்த முறை "மாற்று" என்பது. பத்தரை மாற்று என்பது இந்தக்கால 24 காரட் தங்கத்திற்கு இணையானது.
நவீன காலத்தில் தங்கப்பொடியை பாதரசத்துடன் கலந்து, தங்கத்தை ரசத்தில் கரைத்து, பின் அந்தக் கலவையை ஆவியாக்கி, தங்கத்தை பிரித்து எடுக்கின்றனர். வேறு ஒரு முறையில் தங்கப்பொடியை சயனைடு என்ற வேதிப்பொருளுடன் இணைய வைத்தும் பிரித்து எடுக்கின்றனர். இந்த முறையிலும் பலமுறை சுத்திகரிப்பு செய்தால் மட்டுமே தங்கம் சுத்தமான தங்கமாக நமக்கு கிடைக்கும்.
தங்கம் மிகவும் கனமான பொருள். 35 செ.மீ நீள அகல உயரமுடைய (கிட்டத்தட்ட ஒரு அடி கன சதுரம்) ஒரு தங்க கட்டி ஒரு டன் எடை இருக்குமாம். அவ்வளவு எடை.
உலோகங்கள் பொதுவாக அமிலத்தில் கரைந்து விடும். ஆனால் தங்கம் மட்டும் எந்த அமிலத்திலும் கரையாது. இராஜ திராவகம் என்னும் நைட்ரிக் அமிலம் ஒரு பங்கும் + ஹைட்ரோ குளோரிக் அமிலம் மூன்று பங்கும் கலந்த கலவையில் மட்டுமே கரையும். (இந்த பங்கு என்பது மூலக்கூறு நிறை அளவில் சொல்லப்பட்ட எடை. சாதாரண எடை அல்ல). இந்தக் கலவையை வைத்துதான் பித்தலாட்ட காரர்கள் தங்க நகைக்கு பாலிஷ் செய்து தருகிறோம் என்ற பெயரில் நகையை கொஞ்சம் கரைத்து எடுத்து சென்று விடுகின்றனர்.
தங்கத்தின் மதிப்பிற்கு ஒரு முக்கிய காரணம் அது நமது சுற்றுப்புறத்தில் இருக்கும் எந்த பொருளுடனும் எளிதில் சேராது. ரசம், சயனைடு, இராஜ திராவகம் இந்த மூன்று பொருட்களுடன் மட்டுமே சேரும். இந்த மூன்றும் நமது சுற்றுப்புறத்தில் இல்லை. சோதனை சாலைகளில் மட்டுமே இருப்பவை.
மூழ்கி விட்ட ஒரு கப்பலில் இருந்த ஒரு தங்கக்கட்டி 150 ஆண்டுகள் கழித்து, அதை கண்டுபிடித்த பொழுது அப்படியே புதிது போல இருந்ததாம். இது வரலாற்று சம்பவம். தங்கத்தை பஸ்பமாகவும், செந்தூரமாகவும் மாற்றி சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர்.