Ayurveda

ஒரு அற்புதக்கலை - காயகல்பம்

"காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா" என்று ஒரு கவிஞன் பாடினான். எந்த வகையில் ஆராய்ந்து பார்த்தாலும் இந்த உடல் என்பது பொய் தான். அதாவது ஒரு நாள் அழியக்கூடியது தான். அப்படி அழியக்கூடிய உடலை அழியாமல் பாதுகாக்க, நீண்டகாலம் வாழ ஆதிகால சித்தர்கள் கண்டறிந்த அற்புதக்கலைதான் காயகல்பம்.

ஸ்தூல சரீரத்தில் உருவாகும் வியாதிகளை பற்றி, அவற்றிற்கான மருத்துவம் பற்றி எல்லாவகையான மருத்துவ முறைகளும் மிக சரியாகவே சொல்லி இருக்கின்றன. ஆனால் சூக்கும சரீரத்தை பற்றி, அங்கே வரும் சிக்கல்களை பற்றி சித்தமருத்துவம் போன்ற பழமையான மருத்துவ முறைகள் மட்டுமே கூறி இருக்கின்றன. மேலும் அலோபதி போன்ற மருத்துவ முறைகள் சூக்கும சரீரம் என்ற ஒன்றையே மறுக்கின்றன.

சில காலங்களுக்கு முன்பு, ரஷ்யாவில் ஒரு மருத்துவர் மனிதனின் சூக்கும சரீரம் (Aura) பற்றி ஆராய்ச்சி செய்தார். அப்பொழுது அவர் மனிதனின் உடலில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் நோய் உருவாவதற்கு பல மாதங்களுக்கு முன்பே அந்தப் பகுதியின் சூக்கும சரீரம் பாதிக்க பட்டுள்ளதை கண்டறிந்தார்.

அதன் படி, மனிதனுக்கு பிற்காலத்தில் வரக்கூடிய நோய்களை பற்றி கூட அவனுடைய சூக்கும சரீரத்தை ஆராய்ச்சி செய்து கண்டறிய முடியும். அப்படியே அவனுக்கு சூக்கும சரீரத்தில் சிகிச்சையும் அளிக்க முடியும். சூக்கும சரீரம் பலமாக, ஆரோக்கியமாக இருந்தால், ஸ்தூல சரீரத்தில் பாதிப்பு வரவே வராது.

இந்த முறையில் ஆராய்ந்து, சூக்கும சரீரத்தை பலப்படுத்தி, பலப்படுத்தி மனித உடலையும், ஆயுளையும் நீட்டிக்கும் வழிமுறையைத்தான், காயகல்பம் என்ற பெயரில் நம் முன்னோர்கள் கண்டறிந்து வைத்தனர். காயகல்ப மருந்துகளை செய்வதும், அதை உட்கொள்வதும் மிக மிக கடினம். அதற்கு நீடித்த பயிற்சி அவசியம். குருவின் அருளும் இருக்கவேண்டும்.

நமது உடல் குறிப்பிட்ட தன்மையில், குறிப்பிட்ட தகுதியுடன் காயகல்ப மருந்துகளின் வீரியத்தை ஏற்கும் பக்குவத்துடன் இருக்க வேண்டும். அப்பொழுதே காயகல்பத்தை ஒரு மனிதன் உட்கொள்ள முடியும். இல்லையெனில் காயகல்பம் நீடித்த ஆயுளை தருவதற்கு பதிலாக, உடனடி மரணத்தை கூட தந்துவிடும்.

வடலூர் வள்ளலார், ஒரு காயகல்ப மருந்தை தயார் செய்து பயன்படுத்தி வந்தார். அந்தக் காலத்தில் இரண்டு அரைகுறை சித்தர்கள், வள்ளலாரிடமிருந்து காயகல்பம் செய்யும் முறைகளை கற்றுக்கொள்ளவேண்டும், நாம் மரணமிலா வாழ்வு பெறவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அவரிடம் சீடராக சேர்ந்து, சித்தராக பயிற்சி செய்து வந்தனர்.

ஆனால் இந்த சிறுமதியாளர்களை பற்றி, அவர்களது நோக்கங்களை பற்றி அறியாதவரா வள்ளலார்?

ஒரு நாள் அவர்கள் இருவரையும் அழைத்து, அவரிடமிருந்த காயகல்ப மருந்தை இரு விரலால் எடுத்து, ஒரு முள்ளங்கியின் மீது வைத்தார். சிறிது நேரத்தில் முள்ளங்கி உருகி, அழுகி ஓடியது. அந்த மருந்தின் வீரியத்தை முள்ளங்கியால் தாங்க முடியவில்லை. அதன் பிறகு வள்ளலார், "இப்படியே பயிற்சி பெறாத, சிறு மதியுடன் காயகல்பத்தை பயன்படுத்தினால், உடலை அழித்துவிடும்" என்று சொன்னார். பிறகு அந்த சிறுமதி சித்தர்கள் இருவரும் விடைபெற்று விலகிச் சென்றனர்.

அந்தக்காலத்தில் இருந்தவர்கள் பரவாயில்லை. நீடித்த ஆயுள் வேண்டும் என்பதற்காக மட்டுமே சித்தர்கள் ஆனார்கள். ஆனால் இன்றைக்கு காயகல்பம் பற்றியும், இரசவாதம் பற்றியும் ஆராய்ச்சி செய்கிறவர்களில் பலர் பேராசைக்காரர்கள்.

காயகல்ப மருந்து போதுமான வீரியத்துடன் உருவாகி உள்ளதா என்பதை சோதனையிடும் உரைகல் தான் தாமிரத்தை தங்கமாக்கும் இரசவாத சோதனை. ஆனால் இன்றைக்கு பலர், ஒரு இரண்டு கிலோ தங்கத்தை எப்படியாவது உழைத்து சம்பாதிக்காமல் இரசவாதத்தின் மூலம் உருவாக்கிவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஆழ்ந்த சித்த மருத்துவமும், இரசவாதமும் கற்றுக்கொண்டு இருக்கின்றனர்.

இம்மாதிரி சித்தர்களுக்கு நாயை வாய் கட்டும் சாதாரண சித்தி கூட கிடைக்காது.