Ayurveda

மருந்து செய் இயந்திரங்கள் - பாகம் 2

5. சுடர்த் தைல கருவி

ஒரு நீண்ட வெள்ளைத் துணியில் தைலச் சரக்கை தடவி, திரியை போல அத்துணியை மடித்து, அதை ஒரு குச்சியில் சுற்றி, பிறகு லேசாக நெய் சேர்த்து, தைலச் சரக்கு தேய்த்த துணியை தீப்பந்தம் போல எரியச் செய்ய வேண்டும். இந்த தீப்பந்தத்தை கொஞ்சம் சாய்வாக பிடித்தால், தைல சரக்கு உருகி கீழே சொட்டும். அதை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ள வேண்டும்.

6. குப்பிப் புடக்கருவி

தைலம் இறக்குவதற்காக கூறப்பட்ட சரக்குகளை ஏழு துணிகளால் கட்டி, ஒரு பாட்டிலினுள் வைத்து, பாட்டிலின் கழுத்தில் இருந்து வாய்ப்பகுதி வரை கம்பி வலையை திணித்து வைத்து, வாய்ப்பகுதியையும் கம்பி வலையால் மூட வேண்டும்.

இரும்பு அடுப்பின் மேல்வைக்கப்பட்ட, ஒரு மண் தொட்டியில் அடிப்பக்கம், பாட்டிலின் தலை மட்டும் நுழையுமாறு துவாரமிட்டு, பாட்டிலை அத்துவாரத்தின் வழியாக தலைகீழாக வைத்து, எஞ்சிய சந்திற்கு மண்பூசி, பாட்டிலின் வாய்ப்பகுதிக்கு நேராக கீழே, தைலம் சேகரிக்க ஒரு சுத்தமான பீங்கான் பாத்திரத்தை வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்பொழுது, மண் தொட்டியின் உட்புறம், பாட்டிலின் உடல் பாகம் மட்டும் தலைகீழாக தெரியும். அந்த பாட்டிலை சுற்றி, அரை அடி அகலம் வரை, அதே போல மேலும் எரு அடுக்கி புடமிட வேண்டும். சரக்குகள் தீய்ந்த பிறகு, தைலம் பாத்திரத்தில் இறங்கும். பாட்டிலை சுற்றி அரை அடி அகலம் வரை எருக்கள் நிரப்பப்பட வேண்டும் என்பதால், குறைந்தபட்சம் ஒரு அடி அகலம் இருக்குமாறு உள்ள மண் தொட்டி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

7. குழித்தைல கருவி

ஒரு மண் பானையின் அடியில் சிறிய துளைகள் சில இட்டு, அதில் சரக்கை இட்டு, வாய்ப்பகுதியில் சீலை மண் செய்து மூட வேண்டும். பூமியில் சிறு பள்ளம் தோண்டி, அதில் ஒரு பீங்கான் குடுவை ஒன்றை வைத்து, அந்தக் குடுவையின் வாயில் சரக்கு நிரப்பிய, பானையை வைத்து, காற்று புகாதவாறு, குடுவையின் வாய்ப்பகுதியும் பானையின் அடிப்பகுதியும் பொருந்துமாறு வைத்து சீலை சுற்றி மூட வேண்டும்.

இந்த மொத்த அமைப்பும் பார்ப்பதற்கு ஒரு சிறிய பானைக்கு மேலே வைக்கப்பட்ட, பெரிய பானை போல இருக்கும். இந்த அமைப்பை அப்படியே பூமிக்குள் வைக்கவேண்டும். சிறிய குடுவையின் நான்கு பக்கமும் மண் போட்டு அழுத்தி மூட வேண்டும். ஆனால் பெரிய பானையின் நான்கு பக்கமும் அரை அடி அகலத்திற்கு எரு அடுக்கி புடம் போட வேண்டும். புடம் ஆறிய பின்பு, சிறிய குடுவையில் தைலம் இறங்கியிருக்கும்.

குப்பி புடக்கருவி போன்ற அமைப்புதான் இதுவும் என்றாலும் கொஞ்சம் சிறிய வித்தியாசம். மொத்த அமைப்பும் பூமிக்குள் வைக்கப்படுவதால், தைலச் சரக்கிற்கு கிடைக்கும் வெப்பம் மிக அதிகமாக இருக்கும்.

8. செந்தூரக் கருவி ( பதங்கக் கருவி)

உயரம் குறைவாகவும், அகலம் கொஞ்சம் அதிகமாகவும் உள்ள இரண்டு சட்டிகளை எடுத்துக்கொண்டு, ஒரு சட்டியில் சரக்கை எடுத்துக்கொண்டு, மறு சட்டியை வைத்து மூடி, ஏழு முறை சீலை மண் செய்து மூடி, அடுப்பேற்றி எரிக்கவேண்டும்.

செந்தூரம் ஆகவேண்டிய சரக்குகளை இட்டால், சரக்குகள் செந்தூரம் ஆகும். பதங்கமாக வேண்டிய சரக்குகள் இட்டால் மேல் சட்டியில் பதங்கம் படிந்திருக்கும். சுரண்டிக் கொள்ளலாம். சரக்கு சரியாக செந்தூரம் ஆகவேண்டுமென்றால், காற்று புகாதவாறு சரியாக சீலை மண் செய்திருக்க வேண்டும். இல்லை என்றால் சரக்கு பஸ்பமாகிவிடும்.