சித்தமருத்துவ வழக்கத்தில் மருந்து வகைகளின் பெயர்களை குறிப்பிடும்பொழுது தைலம், சூரணம், கஷாயம் என்று பலவாறாக குறிப்பிடுவர். பெரும்பாலும் சூரணம், தைலம் என்ற சொற்கள் அனைவருக்கும் பரிச்சயமானவை. ஆனால் இது போல முப்பதுக்கும் மேற்பட்ட மருந்து வகைகள் சித்த மருத்துவத்தில் உண்டு. இந்த வகைகள் அனைத்தும் மருந்தின் தோற்றம், செய்முறை போன்றவற்றை கொண்டு வகைப்படுத்தப்பட்டவை.
1. சாறு - இலை, வேர், பட்டை, பூ, காய் போன்ற ஏதாவது தாவர பாகத்தை எடுத்து இடித்து அல்லது அரைத்து சாறு பிழிந்து எடுத்துக்கொள்வது ஆகும். ஒரு பொருளை பிட்டவியல் செய்து பிழிந்து வைத்து கொண்டாலும் அதுவும் சாறுதான்.
2. சுரசம் – இலை, வேர், பட்டை, பூ, காய் போன்ற தாவர சரக்குகளை எடுத்து இடித்து அல்லது அரைத்து, பின் சாறு பிழிந்து அதை மண் சட்டியில் இட்டு கொதிக்கவைத்து எடுத்து கொள்வது ஆகும்.
3. குடிநீர் - தாவர பாகங்களை எடுத்து, ஒன்றிரண்டாக இடித்து சொல்லப்பட்ட அளவு தண்ணீர் இட்டு இரண்டுகொன்றாக அல்லது நான்குக்கு ஒன்றாக என சொல்லப்பட்டபடி சுண்ட காய்ச்சி வடிகட்டி எடுத்துக்கொள்வது ஆகும். இதற்கு இன்னொரு பெயரே கஷாயம். சுரசத்தை போல் இல்லாமல் இது வெகுநேரம் கொதிக்கவைக்கப்பட வேண்டும்.
4. கற்கம் - தாவர பாகங்களை எடுத்து தூய்மையான இரும்புத்தூள் சேர்த்து கல்வத்தில் அரைத்து கட்டியாக எடுத்து வைத்துக்கொள்வது ஆகும். இது மருந்து செய்முறையில் வரும் ஒரு இடைச்சரக்கு. இறுதியான மருந்து அல்ல.
5. உட்களி - மேல் பகுதியில் கொஞ்சம் வறட்சியுடனும், உள்ளே ஈரப்பதத்துடனும் இருப்பது. அரிசி, உளுந்து போன்ற நேரடியாக சாப்பிடும் பொருட்களை எடுத்து மாவாக அரைத்து, சர்க்கரை, நீர் சேர்த்து கரைத்து, சட்டியில் ஊற்றி களி போன்ற பதம் வரும் வரை வேகவைத்து, பின் நெய் சேர்த்து பக்குவம் செய்து வைத்து கொள்வது. சாதாரண கேழ்வரகு களி, உளுந்தங்களி செய்யும் அதே வழிமுறைதான். மருந்து மருந்தை போல தெரியாமல் உணவை போலவே இருக்கும்.
6. அடை - அரிசி மாவுடன் கீரை போன்ற இலை வகைகளை சேர்த்து அரைத்து பணியார கல் அல்லது தோசைக்கல்லில் நெய் தடவி தோசை அல்லது பணியாரம் போல சுட்டு எடுத்துக்கொள்வதாகும்.
7. சூரணம் - தாவர சரக்குகளை எடுத்து நன்றாக உலர்த்தி, தனித்தனியாக இடித்து அல்லது அரைத்து நன்றாக பொடியாக்கி, தேவையான அளவு எடுத்து கலந்து வைத்து கொள்வதாகும். பொடியாக அரைத்த பின்பே சரக்குகள் கலக்கப்பட்ட வேண்டும். மேலும் சூரணங்கள் கலக்கப்பட்ட பின்பு, சூரணத்தூய்மை செய்து பின் அவற்றை பயன்படுத்துதல் நன்று. சூரணத்தை தூய்மை செய்ய, அதை பசும்பால் விட்டு கட்டியாக பிசைந்து, பிட்டவியல் செய்து, பின்பு அப்பிட்டை வெய்யிலில் உலர்த்தி மறுபடியும் இடித்து சலித்து வைத்துக்கொள்ளவேண்டும்.
8. பிட்டு - சூரணம் செய்யப்பட்ட பொருட்களை, பால் சேர்த்து பிசைந்து பிட்டவியல் செய்து, அதை அப்படியே வெல்லம் சேர்த்து சாப்பிடுவது ஆகும்.
9. வடகம் - சூரணங்களை பிட்டவியல் செய்த பின்பு, பிட்டை மீண்டும் இடித்து பிசைந்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வெயிலில் உலர்த்தி வைத்து கொள்வது ஆகும்.
10. வெண்ணெய் - சூரணங்களை இரும்பு சட்டியில் இட்டு, இரண்டு பங்கு பசுநெய் சேர்த்து, சூரணங்கள் நெய்யுடன் நன்றாக கலக்கும் வரை கொதிக்க வைத்து, பின் அதை தண்ணீரில் இட்டு, மத்து வைத்து கடைந்து எடுத்து வைத்துக்கொள்வதாகும்.
11. மணப்பாகு - சரக்குகளின் சாறு அல்லது குடிநீரை எடுத்து மண் சட்டியில் ஊற்றி தகுந்த அளவு கற்கண்டு அல்லது சர்க்கரை சேர்த்து கிளறி, வேகவைத்து, மணம் வரும் பக்குவத்தில் இறக்கி, சில சூரணங்களை சேர்த்து கிளறி ஆற வைத்துக்கொள்வதாகும்.
12. நெய் - பசு நெய்யுடன் சாறு, குடிநீர், கற்கம் வகை மருந்துகளை சேர்த்து மண் சட்டியில் ஊற்றி, நெய் பக்குவத்தில் காய்ச்சி இறக்கி வடிகட்டி வைத்துக்கொள்வதாகும்.
கற்கம் வகை மருந்துகளில் தூய்மை செய்த இரும்புத்தூள் இருக்கும் என்பதை ஏற்கனவே கண்டோம். அதை அப்படியே சாப்பிட முடியாது. மேலும் அது நெய் வகை மருந்தாக மாற்றப்படும் பொழுது நன்றாக வடிகட்டபட வேண்டும்.
13. இரசாயனம் - சரக்குகளை சூரணம் செய்து, சர்க்கரையும் நெய்யும் தேவையான அளவு சேர்த்து, பசை போல பிசைந்து வைத்துக்கொள்வதாகும். இது அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டியது. வேகவைத்தால் கிடையாது.
14. இளகம் - சாறு, குடிநீர் வகை மருந்துகளுடன் சர்க்கரை சேர்த்து சிறு தீயாக எரித்து வேகவைத்து, சாறு சுருங்கிய பின் சூரணங்களை தூவி கிளறி, பின்பு தேனும், அதன் பின் நெய்யும் விட்டு கிளறி பக்குவமாக எடுத்து வைத்து கொள்வதாகும்.
மணப்பாகு செய்வது போலவே செய்முறை என்றாலும் தேனும் நெய்யும் இங்கே கூடுதலாக சேர்க்கப்படுகின்றன. மேலும் இது மணப்பாகுவை விட சற்று கட்டியாக இருக்கும். இந்த இளகம் என்ற வார்த்தையே மருவி பின்னாளில் லேகியம் என்றானது.
வேறு ஒரு முறையில் சாறு, குடிநீர் வகை மருந்துகள் இல்லாமல் வெல்லம், தண்ணீர், பசும்பால் இட்டு காய்ச்சி, பின் சூரணங்களை இட்டு கிளறி, அதன் பின் தேனும், நெய்யும் விட்டு கிளறி பக்குவமாக எடுத்து வைத்து கொள்வதும் சித்தர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.
15. எண்ணெய் - நாம் பொதுவாக எல்லா தாவர நெய்களையும் எண்ணெய் என்றே அழைக்கிறோம். ஆனால் எள் + நெய் = எண்ணெய் என்பதே பழந்தமிழர் வழக்கம். எள்ளில் இருந்து எடுக்கப்படும் நெய்யிற்கு மட்டுமே எண்ணெய் என்ற சொல் பொருத்தமானது.
அதன்படி எள் நெய், தேங்காய் நெய், கடலை நெய், ஆமணக்கு நெய், பசு நெய் என்று குறிப்பிடுவதே சரியானது. வடமொழியில் "திலம்" என்பது எள். அதன்படி அவர்கள் எள் நெய்க்கு வைத்த பெயர் "தைலம்". இப்படியே ஏதாவது ஒரு நெய் கொண்டு செய்யப்படும் அதிக நீர்த்த நிலை மருந்து வகைகளுக்கு "நெய்" அல்லது "தைலம்" என்ற பெயர் வழங்கப்படுகிறது.
16. மாத்திரை - சரக்குகளை இலைச்சாறு அல்லது குடிநீர்களை கொண்டு அரைத்து, தேவையான அளவு எடுத்து உருட்டி, காய வைத்து எடுத்துக்கொள்வதாகும். பொதுவாக மாத்திரை அளவில் உருண்டையாக உருட்டுவதால் மாத்திரை என்ற பெயரே வைக்கப்பட்டது.