Ayurveda

சித்த மருந்து வகைகள் - பாகம் 2

சித்தமருத்துவ வழக்கத்தில் மருந்து வகைகளின் பெயர்களை குறிப்பிடும்பொழுது தைலம், சூரணம், கஷாயம் என்று பலவாறாக குறிப்பிடுவர். பெரும்பாலும் சூரணம், தைலம் என்ற சொற்கள் அனைவருக்கும் பரிச்சயமானவை. ஆனால் இது போல முப்பதுக்கும் மேற்பட்ட மருந்து வகைகள் சித்த மருத்துவத்தில் உண்டு. இந்த வகைகள் அனைத்தும் மருந்தின் தோற்றம், செய்முறை போன்றவற்றை கொண்டு வகைப்படுத்தப்பட்டவை.

17. கடுகு - சரக்குகளை நெய்யுடன் சேர்த்து காய்ச்சி, சரக்குகள் திரண்டு வரும்போது, அதை மட்டும் எடுத்து வைத்துக்கொள்வதாகும். கடுகை உள்ளுக்குள் கொடுக்கவும், மீதமான எண்ணையை மேலே பூசவும் பயன்படுத்துவர். கிட்டத்தட்ட வெண்ணெய் போன்ற செய்முறை தான். ஆனால் மத்திட்டு கடைவது கிடையாது.

18. பக்குவம் - சரக்குகளை தண்ணீர் அல்லது அரிசி கழுவிய நீரில் ஊற வைத்து, சரக்குகளின் பாகங்கள் மென்மையான பின் இலைச்சாறு, கஷாயம், மோர் போன்றவற்றில் போட்டு, மற்ற சரக்குகளின் பொடியை தூவி பக்குவம் செய்வது. வேகவைத்தல் பொதுவாக கிடையாது.

19. தேனூறல் - இஞ்சி, நெல்லிக்காய், கடுக்காய் போன்றவற்றை நீரில் ஊறவைத்து, பின்பு ஊசி குதி, தண்ணீர் இறங்கும்படியாக உலரவைத்து, அதற்கு பிறகு தேனில் ஊறவைப்பதாகும். தேனில் ஊறவைக்க, முதலில் அந்த சரக்கின் சாறு வடிக்கப்பட வேண்டும். எனவேதான் தண்ணீரில் ஊறவைத்து, பின் காய வைப்பது.

20. தீநீர் - சரக்குகளை சேர்த்து வாலை இயந்திரத்தில் தண்ணீர் சேர்த்து அடுப்பேற்றி எரித்து இறக்குவது தீநீர் ஆகும். இதே முறையில் உப்பு வகைகளை வாலை இயந்திரத்தில் இட்டு எரித்து இறக்குவது "புகைநீர்" அல்லது "திராவகம்" ஆகும்.

21. மெழுகு - இரசகலப்புள்ள சரக்குகளை, இலைச்சாறுகள் அல்லது தேனில் அரைத்து மெழுகுப் பக்குவமாக எடுத்து வைத்துக்கொள்வது அரைப்பு மெழுகு என்றும், சரக்குகளை மூலிகைகளில் அல்லது எண்ணெய்களில் சுருக்கு கொடுத்து, அவை இளகி மெழுகு பதமாகும்போது, எடுத்து குழிக்கல்லில் இட்டு அரைத்து எடுத்துக்கொள்வது சுருக்கு மெழுகு என்றும் இரண்டு வகைப்படும்.

22. குழம்பு - இலைச்சாறுகளை ஒரு சட்டியில் இட்டு, சர்க்கரை, சூரணப்பொடிகள் சேர்த்து காய்ச்சி குழம்பு பக்குவத்தில் எடுத்து வைத்துக்கொள்வதாகும். இளகம் செய்வது மாதிரியான அதே வழிமுறைதான்.

23. பதங்கம் - ஆவியாக கூடிய, ரசகலப்புள்ள பொருட்களை மண் சட்டியில் உப்பு, செங்கல்தூளை மேலும் கீழும் இட்டு, அதற்கிடையில் வைத்து, சீலை மண் செய்து மூடி, அடுப்பேற்றி எரித்து, மூடியான சட்டியில் இருக்கும் பதங்கமான பொருளை வழித்து எடுத்துக்கொள்வது. இம்முறையில் ஒரு சில மருந்துகளை பலமணி நேரம் வரையிலும், வேறு சில மருந்துகளை நாளுக்கு சிலமணி நேரம் வீதம், பல நாட்களும் எரித்து தயார் செய்ய வேண்டியிருக்கும்.

24. செந்தூரம் - உலோகங்கள் அல்லது பாஷாணங்களை, இலைச்சாறு அல்லது குறிப்பிடப்பட்ட செயநீரில் அரைத்தோ, புடம்போட்டோ, வறுத்து அரைத்தோ, எரித்தோ, வெய்யிலில் காயவைத்தோ சிவக்கும்படி செய்து எடுத்துக்கொள்வது. பெயருக்கு ஏற்ப பொருள் நன்றாக சிவக்கும்படி செய்ய வேண்டும்.

25. பற்பம் - உலோகங்கள் அல்லது பாஷாணங்களை, குறிப்பிடப்பட்ட செயநீரில் அரைத்து புடம்போட்டோ, வறுத்து எரித்தோ வெளுக்கும்படி செய்துகொள்வது. கிட்டத்தட்ட சாம்பல் ஆக்குவது போலத்தான். அதனால் இதற்கு நீறு, வெண்ணீறு என்று வேறு சில பெயர்களும் உண்டு. பொதுவாக எல்லா பற்பங்களும் வெண்ணிறத்தில்தான் இருக்கும். விதிவிலக்காக தங்கபற்பம் மட்டும் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

26. கட்டு - பாஷாணங்களை குறிப்பிட்ட செயநீர் கொண்டு சுருக்கு கொடுத்து கட்டி எடுத்துக்கொள்வதாகும்.

27. உருக்கு - உலோகங்கள் அல்லது பாஷாணங்களை மற்ற சரக்குகளுடன் கூட்டி, மூசையில் இட்டு, சீலைமண் செய்து மூடி, இயற்கை கரியிட்டு ஊதி, இளக செய்து ஆறவிட்டு எடுப்பது. இதன் மூலம் உலோகங்கள் சுத்தி செய்யப்படுகின்றன.

28. களங்கு - பாதரசம் போன்ற சரக்குகளை குறிப்பிடப்பட்ட செயநீர் கொண்டு, சுருக்கு கொடுத்து, புடமிட்டு, கரியிட்டு ஊதி எரித்து, மணியாக்கி, தங்கமும், நாகமும் கூடி ஆறாவது எடுத்துக்கொள்வது ஆகும்.

29. சுண்ணம் - ரசத்தை அல்லது பாஷாணங்களை, செயநீர் கொண்டு, கல்வத்தில் இட்டு அரைத்து, உருட்டி, உலர்த்தி, மூசையில் இட்டு, சீலை செய்து உலர்த்தி, கரி நெருப்பில் இட்டு ஊதி எடுத்து, ஆறவைத்து சாம்பல் போல செய்துகொள்வது. ஆனால் இது நீறு அல்ல.

30. கற்பம் - தாவர பொருட்களை அல்லது மற்ற சத்துக்களையாவது கூறப்பட்டுள்ள பத்தியபடி, அளவுப்படி உண்டுவருவது. இது வெறும் மருந்து அல்ல. மருந்தோடு சேர்ந்த செயல்முறையும் ஆகும். இதை செய்வதும், செய்ததை உண்பதும் சித்தி பெற்ற வைத்தியர்களால் அல்லது சித்தர்களால் மட்டுமே முடியும்.

31. சத்து - காந்தம், இரும்புத்தூள், மற்ற உபரசங்களோடு பாஷாணங்களை சேர்த்து, வெண்கரு செயநீரால் அரைத்து, உலர்த்தி, மூசையில் இட்டு, சீலைமண் செய்து, மூன்று முறை ஊதி எடுத்து, பின் தங்கம், ரசம், கந்தகம் சேர்த்து அரைத்து குப்பியில் இட்டு எரித்து செந்தூரம் ஆக்கி கொள்வது.

32. குளிகை - வாலை ரசத்தை சரக்குகளால் கட்டி, மணிமணியாக செய்து கோர்த்துக்கொள்வது.