சித்தமருத்துவத்தில் பயன்படுத்தப்படும் தாதுப்பொருட்களில் ஒரு வகையே உலோகங்கள். இந்த உலோகங்களை மனிதன் நேரடியாக உணவாகவோ மருந்தாகவோ சாப்பிட முடியாது. ஆனால் வேறு பொருளாக மாற்றி நாம் சாப்பிட முடியும்.
உதாரணமாக சோடியம் என்ற உலோகம் கடினமான நெடி கொண்டதும், இயற்கையில் தனியாக கிடைக்காததும், எளிதில் எரியக்கூடியதுமான ஒன்றாகும். ஆனால் அதே உலோகம் உப்பாக மாறி நமக்கு கல்லுப்பு என்ற பெயரில் கிடைக்கிறது.
இரும்பையோ, நாகத்தையோ மற்ற பிற உலகங்களையோ மனிதன் தனியாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதால், பெரும்பாலும் அதை உலோக உப்புக்களாக மாற்றி நோயை குணப்படுத்தும் முறையை ஆதிகால சித்தர்கள் கண்டறிந்துள்ளனர்.
அவர்கள் பயன்படுத்திய உலோகங்களில் இரும்பு, எக்கு, வெள்ளீயம், காரீயம், தாமிரம், நாகம் போன்ற சாதாரண உலோகங்கள் முதல் வெள்ளி, தங்கம் போன்ற விலைமதிப்பு மிக்க உலோகங்கள் வரை கணக்கில் உண்டு. இவை தவிர, வெண்கலம், பித்தளை, தரா போன்ற வைப்பு முறையில் உருவாக்கப்பட்ட செயற்கை உலோகங்களையும் பயன்படுத்தி உள்ளனர்.
உற்றுப்பார் தங்கம்வெள்ளி செம்பு நாகம்
உருக்கிரும்பு வெண்கலம் பித்தளை தராவும்
நத்திப்பார் காரீயம் வெள்ளீ யந்தான்
நலமாக பதினொன்றாய் பிரித்த தையா
என்ற பாடலில் இந்த உலோகங்கள் பதினொன்றையும் பற்றி போகர் குறிப்பிடுகிறார்.
இந்த உலோகங்களை சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கவும், அவற்றின் மூலகங்களின் பிரித்தெடுக்கவும், சுத்தி செய்யவும், பிற பொருட்களுடன் வேதிக்கவும், எரித்து பஸ்பமாக்கவும் நமது பாரம்பரிய மருத்துவத்தில் வழிமுறைகள் உண்டு.