சித்த மருத்துவத்தில் பயன்படுத்த படும் உலோகங்களில் முதன்மையான தங்கத்திலிருந்து பஸ்பமாகவும், செந்தூரமாகவும் பல மருந்துகள் செய்யப்படுகின்றன. மருந்துகள் செய்வதற்கு சுத்தமான தங்கமே பயன்படுத்தப்பட வேண்டும். வெள்ளியோ அல்லது தாமிரமோ கலந்த ஆபரணத் தங்கம் கூடாது.
தங்கத்திற்கு வெப்ப வீரியம் இருக்கிறது. இனிப்பு சுவை இருக்கிறது. ஆனால் மற்ற இனிப்பு சுவையுள்ள பொருட்களை போல இது கபத்தை அதிகரிக்க செய்யாது. சன்னி, இளைப்புநோய், சுவாச காசம்,உடல் வெப்பம், நாட்பட்ட கபம், தாது நாட்டம், கோழைக்கட்டு போன்றவற்றை நீக்கக்கூடிய மருந்துகளில் தங்கம் பயன்படுத்தப்படுகிறது.
தங்க உரம் என்னும் மருந்து நவச்சாரம், வெண்வங்கம், கந்தகம், ரசம், போன்றவற்றை சம அளவு எடுத்துக்கொண்டு, வெடியுப்பு திராவகத்தால் மெழுகுபோல மையாக அரைத்து, சீலைமண் செய்து வாலை இயந்திரத்தில் இருபத்தைந்து மணிநேரம் எரித்து செய்யப்படுகிறது. தங்க உரத்தில் தங்கம் கிடையாது.
பொன் அப்பிரகம் போல பளபளப்பாக இருக்கும் இந்த மருந்து ஆண், பெண் பிறப்பு உறுப்பு சார்ந்த நோய்களை குணப்படுத்த பயன்படுகிறது. மேலும் உடலை தேற்றவும், பசி உண்டாக்கவும், வீரியத்தை அதிகரிக்கவும் பயன்படுகிறது.
அப்பிரகம் என்பது மைக்கா தகடு போல பளபளப்பாக, உடைய கூடியதாக இருக்கக்கூடிய ஒரு பொருள். அதாவது தங்கத்தால் செய்யப்பட்ட அப்பிரகம் போல தங்க உரம் இருக்குமாம்.
மேலும் தங்கத்தை, கந்தகம் மற்றும் ரசத்துடன் சேர்த்து செய்யப்படும் பூரணச் சந்திரோதய செந்தூரம் என்ற மருந்து இருமல், காசநோய், மலச்சிக்கல், கபம் அதிகமாவதால் வரும் கழிச்சல், செரியாமை, காய்ச்சல், வெள்ளைப்படுதல், மற்றும் மஞ்சள் காமாலை போன்ற வியாதிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
தங்க செந்தூரம் வேறு சில மருந்துகளுடன் சேர்க்கப்பட்டு, ஆட்டிசம் போன்ற நோய்களுக்கு கூட மருந்தாக பயன்படுகிறது. தங்க பஸ்பம் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. தங்க பஸ்பம் உடலை பொன் போல மாற்றுகிறது, நீடித்த ஆயுள் தருகிறது, உயிரணு உற்பத்தியை தூண்டுகிறது, உயிரணுகளின் வீரியத்தை அதிகரிக்கிறது, நரம்பு தளர்ச்சியை நீக்குகிறது என்று பல நல்ல விஷயங்கள் இருப்பதால்தான் தற்கால பிரபலங்கள் கூட அதை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.
தற்காலத்தில் மட்டுமா?. 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த சாளுக்கிய மன்னர் மூன்றாம் சோமேஸ்வர் என்பவர் கூட தங்கபஸ்பத்தை செய்து பயன்படுத்தியதோடு அதை எப்படி செய்யவேண்டும் என்று குறிப்பும் எழுதி வைத்திருக்கிறார்.
இப்படியெல்லாம் தங்கம் மனிதன் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்ததால்தான் மண்ணாசை, பெண்ணாசையோடு சேர்த்து பொன்னாசை என்றும் கூறி இருக்கின்றனர். இரும்பு ஆசை, தாமிர ஆசை என்றெல்லாம் எவரும் கூறவில்லை போலும்.
இருப்பினும், தங்கத்தை செந்தூரமாகவோ, பஸ்பமாகவோ மற்றும் போது முறையாக தகடாக்கி, சுத்தி செய்து, சொல்லப்பட்ட மூலிகை சாற்றில் நன்றாக அரைத்து, தங்கதுகள்கள் மிக நன்றாக பொடியாகும்படி செய்ய வேண்டும். அத்தனை தூரம் தங்க துகள்கள் பொடியாக மாற்றப்பட்டால் மட்டுமே உட்கொள்ளப்படும்போது, சிறுகுடலில் உறிஞ்சப்பட்டு, உடலின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று எதிர்பார்த்தது போன்ற நல்ல விளைவுகளை உண்டாக்கும். இல்லையெனில் எதிர்பாராத தீய விளைவுகளை உண்டாக்கலாம்.