Ayurveda

மருந்து செய் கருவிகள் - பாகம் 1

மருந்து செய்முறையில் தாதுப்பொருட்களான பாஷாணங்களும், காரசாரங்களும் முதலில் சுத்தி செய்யப்பட வேண்டும். அவற்றை சுத்தி செய்ய கருவிகளும் இயந்திரங்களும் அவசியம். அவற்றில் கல்வம், கரண்டி, அகல், குப்பி அல்லது குடுவை, அடைப்பான், சலாகை, சட்டி, மூசை, சீலை, மணல், சுண்ணாம்பு, குழி, புடம், அடுப்பு, துருத்தி முதலிய கருவிகளும், விறகு, கரி, வறட்டி முதலிய எரிப்பொருட்களும் அடங்கும்.

1. கல்வம் - இது மருந்துகளை அரைக்க பயன்படும் கருங்கல்லினால் செய்யப்பட்ட குழியுள்ள அம்மி. மருந்து செய்வதற்கு மிகச்சரியான பாறை கொண்டு கல்வம் செய்யப்பட வேண்டும். கருங்கல், சிவப்புக்கல், மஞ்சள்கள், வெள்ளைக்கல் என பலவகை கற்கள் இயற்கையில் கிடைக்கின்றன. இதில் கருங்கல் மிக சிறப்பானது ஏனெனில் இது தேய்ந்து மருந்துடன் கலக்காது. சிவப்புக்கல்லில் சன்னி நோய்களுக்கு மட்டும் மருந்து அரைக்கலாம். மஞ்சள், வெள்ளை கற்களால் செய்யப்பட்ட கல்வம் மருந்து அரைக்க உதவாது.

2. கரண்டி - இது கல்வத்தில் அரைத்த மருந்தை வழிக்கும் கரண்டி. வெள்ளி அல்லது எக்கினாலான கரண்டி மிக சிறப்பானது. மரக்கரண்டியும் பயன்படுத்தலாம். இரும்பு கரண்டி கூடாது.

3. அகல் - இது அரைத்த மருந்தை வைக்க பயன்படும் வட்டமான மண்தட்டு.

4. குப்பி அல்லது குடுவை - இது கழுத்து குறுகலாகவும், அடி அகலமாகவும் இருக்கும் ஒரு ஜாடி. இது பழங்காலத்தில் பூநீறு கொண்டு செய்யப்பட்டது. தற்பொழுது கண்ணாடியால் செய்யப்பட்ட குடுவைகள் அதிகம் புழக்கத்தில் உள்ளன.

5. சலாகை - இது எக்கினால் செய்யப்பட்ட மெல்லிய கம்பி. சலாகை குப்பியில் எரிகின்ற மருந்துகளை கிளறவும், சரியாக வெந்திருக்கிறதா என்று பக்குவம் பார்ப்பதற்கும் பயன்படுகிறது.

6. அடைப்பான் - இது குப்பியை மூடி வைக்கும் மூடி. மாவுக்கல்லினால் செய்யப்பட்ட இந்த மூடியில் மெல்லிய துளையிட்டு அதன் வழியாகவே சலாகை நுழைக்கப்படும். மருந்து தயாராகிக்கொண்டிருக்கும் பொழுது அடைப்பான் நீக்கப்பட கூடாது.

7. குண்டுசட்டி - வாய் அகன்ற, ஆழமான மண் பாத்திரம்.

8. மூசை அல்லது குகை - இது களங்கு, சுண்ணம் வகை மருந்துகள் செய்வதற்கு பயன்படுத்தப்படும் கருவி. இதில் மண்மூசை, வஜ்ஜிரமூசை, உருக்குமூசை, பஞ்ச சுண்ண மூசை, பஞ்சபூத மூசை என பலவகைகள் உண்டு. மண்மூசையானது மணல், கரி, சாம்பல், களிமண், தேங்காய் நார் கொண்டு செய்யப்படுகிறது. வஜ்ஜிரமூசையானது களிமண், அயக்கிட்டம், சணல், தார், உமிக்கரி, அடுப்புக்கரி, சுண்ணாம்பு போன்றவை சேர்த்து செய்யப்படுகிறது. இந்த இரண்டு வகை மூசைகளும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.

9. சீலை - இது சுத்தமான, அழுத்தமான பருத்தித்துணி ஆகும். குண்டுச்சட்டி அல்லது குடுவையை மூடி வைத்து மூடி பின் வெப்பம் வெளியேறாமல் வேக வைக்க இந்த சீலையை மிருதுவாக அரைத்த புற்றுமண்ணில் தேய்த்து, மூடியை சுற்றி கட்ட வேண்டும். தற்காலத்தில் இருக்கும் குக்கர் போன்ற அமைப்பை உருவாக்க சித்தர்கள் கண்டுபிடித்த முறையாகும். புற்றுமண்ணிற்கு பதிலாக கோதுமை மாவு அல்லது உழுந்தமாவு அல்லது முட்டையின் வெள்ளை கலந்த சுண்ணாம்பு பயன்படுத்தலாம்.

10. மணல் - வெப்பத்தை இழுத்து அதிக நேரம் தக்க வைத்துக்கொள்ள மணல் பயன்படுகிறது. சிறுமணல் அதிக வெப்பத்தையும், பெருமணல் சற்று குறைவான வெப்பத்தையும் தக்க வைத்துக்கொள்ள பயன்படுத்தப்படுகிறது. எப்பொழுதும் தூசு, புழுதிகள் இல்லாத ஆற்று மணலே பயன்படுத்தப் படவேண்டும்.

11. சுண்ணாம்பு - தாது பொருள்கள் சிலவற்றை சுண்ணமாக்க மணலுக்கு பதிலாக சுண்ணாம்பின் உதவி கொண்டு எரிக்க வேண்டும். ஒரு சில பாஷாணங்களை பஸ்பமாக்கும் பொழுதும் மணலுக்கு பதிலாக சுண்ணாம்பு பயன்படுத்தப்படுகிறது.

12. குழி - இது தாது பொருள்களை புடம் போடுவதற்காக நிலத்தில் தோண்டப்படும் பள்ளம் ஆகும். தேவைக்கேற்ப ஒன்பது அங்குல அகலம், ஆழம் முதல் மூன்றடி அகலம், ஆழம் வரை சிறியதாகவே பெரியதாகவோ குழி தோண்டப்படும்.