வாதம், பித்தம், கபம் என்று சித்த மருத்துவத்திலும் ஆயுர்வேதத்திலும் குறிப்பிடப்படும் மனித உடலின் பிரதான நாடிகள் மனித உடலின் சமநிலையை பேணி ஆரோக்கியத்தை காக்கின்றன. இந்த மூன்று நாடிகளே நவீன அறிவியலால் அளவிடப்படும் இதயத்துடிப்பு, ரத்த ஓட்டம், ஆக்சிஜன் அளவு போன்ற மற்ற விஷயங்களை தீர்மானிக்கின்றன.
உண்மையில் வாதம், பித்தம், கபம் என்பது ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்படும் வார்த்தைகளே. வளி, அழல், ஐயம் என்பது வாதம், பித்தம், கபம் என்பதற்கான சுத்த தமிழ் சொற்கள். இந்த நாடிகளில் எது கூடினாலும், குறைந்தாலும் உடல் நோய்வாய்ப்படும். இதனை
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று
என்ற திருக்குறளின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த நாடிகளில் வாத நாடி காற்றின் அம்சம். பித்த நாடி நெருப்பின் அம்சம். கப நாடி நீர் அல்லது குளிர்ச்சியின் அம்சம். வளி என்ற தமிழ் சொல்லின் மூலம் நாம் இதை உறுதிப்படுத்தி கொள்ளலாம். இந்த மூன்றுமே முக்கியமானது என்றாலும், வாத நாடி மிக மிக முக்கியமானது.
நாடி வைத்தியத்தில் வாயுவை ஒத்த தன்மையுடன் இருக்கும் வாத நாடி பிரதானமானது. வாத நாடி விழுந்துவிட்டால் வைத்தியம் பலிக்காது.
அது போலவே இயற்கையாக வாத நாடி ஒரு மாத்திரை அளவு துடிக்கும் என்றால், பித்த நாடி அரை மாத்திரை அளவும், கப நாடி கால் மாத்திரை அளவுமே துடிக்கும்.
அது என்னப்பா மாத்திரை என்று கேட்கிறீர்களா?
அதனுடைய துடிப்பின் அளவு மாத்திரை என்பதாகும். தமிழ் இலக்கணத்தில் கூட "அ", "இ" போன்ற குறில் எழுத்துக்கள் ஒரு மாத்திரை அளவு உச்சரிப்பை கொண்டவை. "ஆ", "ஊ" போன்ற நெடில் எழுத்துக்கள் இரண்டு மாத்திரை அளவு உச்சரிப்பை கொண்டவை. "க்", "ச்" போன்ற ஒற்றெழுத்துக்கள் அரை மாத்திரை அளவு உச்சரிப்பை கொண்டவை.
ஒரு மாத்திரை அளவு கொண்ட வாத நாடியின் துடிப்பை மணிக்கட்டில் விரலை வைத்து பார்த்து ஏறக்குறைய அனைவரும் உணர்ந்து கொள்ளலாம். கொஞ்சம் பயிற்சி எடுத்துக்கொண்டால், பித்த நாடியை பிடித்து விடலாம். ஆனால் கப நாடியை பிடித்து உணர அதிக பயிற்சி வேண்டும். நிறைய பேருக்கு கபநாடி துடிப்பதே உணர முடியாது. ஏனெனில் அது கால் மாத்திரை அளவே கொண்டது.
வாத நாடி மிகவும் பிரதானமானது என்று சொன்னேன் அல்லவா. அதற்கான ஆதாரம் மகாபாரதத்திலும் ஓரிடத்தில் காணக்கிடைக்கிறது.
சரி, நாம் கொஞ்சம் மஹாபாரதம் பக்கம் போகலாம்.