தாவர பொருள்களானாலும் சரி, உலோகங்களானாலும் சரி, மருந்து தயாரிக்க பயன்படுத்தப்படுவதற்கு முன்பு சித்த மருத்துவ முறைப்படி சுத்தி செய்யப்பட வேண்டும். இரும்பை சுத்தி செய்யவதற்கு பலவழிமுறைகளை நமது முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள்.
ஒரு பங்கு அயப்பொடிக்கு 6 பங்கு இலுப்பை பூச்சாறு விட்டு, 6 நாட்கள் மாலை வரை வெயிலில் காயவைத்து, பின் 2 நாட்கள் சாறுவிடாமல் உலர்த்த வேண்டும். இதே வழிமுறையை மீண்டும் 2 முறை செய்யவேண்டும். மொத்தமாக காயவைக்கவும், உலர வைக்கவுமாக (6+2+6+2+6+2) இருபத்து நான்கு நாட்கள் கழிந்தபின்னர், 25ம் நாள் முதல் 10 நாட்கள் சாறுவிட்டு காயவைத்து, பின் 2 நாட்கள் சாறு விடாமல் உலர்த்தி, நீரில் கழுவி எடுக்க அயம் சுத்தியாகும்.
இது ஒரு மிக நீண்ட முறை, இதை செய்வதற்கு நமக்கு 36 நாட்கள் வெயில் இருக்க வேண்டும். நாமும் அதை கவனமாக பார்க்க வேண்டும். பகலில் வெயிலில் வைக்க வேண்டும். இரவில் வீட்டிற்குள் எடுத்து வைத்து விட வேண்டும். ஆனால் வெயிலையும், இலுப்பை பூச்சாறையும் விட வேறு எதுவும் நமக்கு தேவையில்லை.
வேறு ஒரு முறையில் ஒரு பங்கு அயப்பொடிக்கு, 8 பங்கு அல்லிவேர், 8 பங்கு புன்னைவேர் இடித்து போட்டு, 16 பங்கு காடி நீர் விட்டு ஒரு இரவும் பகலும் தீபாக்கினியாய், காடி குறையாமல் எரித்து எடுக்க அயம் சுத்தியாகும்.
இது முதலாவது சொன்னதை போல மிக நீண்டவழிமுறை இல்லை. இருப்பினும், இதற்கு அல்லிவேரும், புன்னை வேரும் 8 பங்கும், காடி நீர் 16 பங்கும் தேவைப்படுகிறது. பொதுவாக காடி செய்வதற்கு எதோ ஒரு அரிசியை பயன்படுத்துவதற்கு பதிலாக, கருங்குறுவை அரிசியை பயன்படுத்தினால் நன்று.
ஒரு பங்கு கருங்குறுவை அரிசியுடன், மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து, மண்பானையில் ஆறு மாதம் வைத்திருந்தால், அரிசியில் உள்ள மாவுப்பொருள், நொதித்து, புளித்து, அமிலச்சத்து கொண்ட அன்னக்காடி நீராக மாறுகிறது. சில வியாதிகளுக்கு இது ஒரு நேரடி மருந்து. மேலும் பல உலோக சுத்தி முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
வேறு ஒரு முறையில், அயப்பொடியை உலையில் இட்டு சிவக்க காய்ச்சி, ஆறுமாத அன்னக்காடி நீர், நல்லெண்ணெய், கோமியம், கொள் குடிநீர் ஆகிய நான்கிலும் மும்மூன்று முறை தேய்த்து அலசி, பின் நீரில் அலசி எடுக்க சுத்தியாகும். இந்த முறையில் பயன்படுத்தப்படும் துணைப்பொருட்கள் தான் அதிகமே தவிர, சுத்தி செய்ய அதிக காலம் ஆகாது.
அதே போல் வேறு ஒரு முறையில் அயப்பொடியை எலுமிச்சம் பழச்சாறு, காடி நீர், காட்டாமணக்கு பால் ஆகிய ஒவ்வொன்றிலும் 3 நாட்கள் வீதம் ஊற வைத்து, கழுவி எடுக்க சுத்தியாகும். வேறு ஒரு முறையில் அயப்பொடியை நாவல் பழச்சாறில் மூழ்க வைத்து, வெயிலில் சுண்ட காய வைத்து, கழுவ வேண்டும். இதை ஆறு முறை செய்ய அயப்பொடி சுத்தியாகும்.
எல்லா வகை சுத்தி முறைகளிலும், காலம் அல்லது பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகிய இரண்டில் எதோ ஒன்று அதிகமாகவும், மற்றது குறைவாகவும் இருக்கிறது. வெயில் கிடைக்காதவர்கள் இரண்டாவது, மற்றும் மூன்றாவது வழிமுறையையும் மற்றவர்கள் பிற வழிமுறைகளையும் பயன்படுத்தலாம்.
இவ்வாறு சுத்தி செய்யப்பட்ட அயப்பொடியை வேங்கை வேர்ப்பட்டைச் சாறு 7 பங்குடன், 7 நாட்கள் அரைத்து, வில்லை செய்து, 5 நாட்கள் உலர்த்தி, 40 வறட்டி கொண்டு, புடம் போட்டு எரித்து எடுக்க அயப்பொடி பற்பமாகும். வேறு ஒரு முறையில், செங்கரும்புச்சாறு 4.5 பங்குடன், 9 நாட்கள் அரைத்து, வில்லை செய்து, 8 நாட்கள் உலர்த்தி, 50 வறட்டி கொண்டு புடம்போட்டு எரித்து எடுக்க அயப்பொடி பஸ்பமாகும். வேறு ஒரு முறையில் கற்றாழை வேர்ச்சாறு 1.5 பங்குடன், 13 நாட்கள் அரைத்து, வில்லை செய்து 12 நாட்கள் உலர்த்தி, 27 வறட்டி கொண்டு, புடம்போட்டு எரித்து எடுக்க பஸ்பமாகும்.
இதே முறையிலேயே அயச்செந்தூரமும் செய்யப்படுகிறது. ஒரு பங்கு அயப்பொடிக்கு ஆரையிலைச் சாறு, தென்னங்குருத்துச் சாறு, பணகுருத்துச் சாறு, ஆடாதொடைச் சாறு, சீந்திற்ச்சாறு, தூதுவளைச்சாறு இவற்றில் எதாவது ஒன்று 5 பங்குடன், 5 நாட்கள் அரைத்து, வில்லை செய்து, 4 நாட்கள் உலர்த்தி, 30 வறட்டி கொண்டு புடம்போட்டு எரித்து எடுக்க அயச்செந்தூரம் கிடைக்கும்.
செந்தூரம், பஸ்பம் இரண்டும் ஒரே செய்முறைதான் என்றாலும், செந்தூரத்திற்கு குறைவான அளவில் வறட்டி கொண்டு எரிக்கப்படுகின்றது என்பதை கவனிக்க.
நவீனமுறை எரி உலைகளில், இரும்பு எரிக்கப்படும்போது வெவ்வேறு வெப்ப நிலைகளில் வெவ்வேறு பொருளாக எவ்வாறு மாறுகிறது என்பதை நமக்கு விளக்கி கூறி இருப்பார்கள். அதே போல ஆதிகாலத்தில் நமது முன்னோர்கள் அயப்பொடியை எவ்வளவு நேரம் இருக்கிறோம், எத்தனை வறட்டி கொண்டு எரிக்கிறோம் என்பதைக் கொண்டு செந்தூரமாகவோ, பஸ்பமாகவோ ஆக்கி இருக்கிறார்கள்.
அயப்பொடியை கொண்டு அயபற்பம், செந்தூரம் தயாரிக்க முதலில் சுத்தமான அயப்பொடியை வாங்கிக்கொள்ள வேண்டும். சுத்தமான அயம் வெள்ளி போன்ற ஒளிரும் தன்மையுடன், அலுமினியத்தை போன்ற நிறத்தில் இருக்கும். அதுவே சுத்தமான இரும்புத்தூள் ஆகும்.
கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் இரும்பில் கொஞ்சம் கார்பன் கலக்கப்பட்டு இருக்கும், அரிவாள், உளி போன்ற ஆயுதங்கள் செய்யப்படும் இரும்பு பல உலோகங்கள் சேர்ந்த ஒரு இரும்புக்கலவை ஆகும். துருப்பிடிக்காத இரும்பும் ஒரு இரும்புக்கலவையே ஆகும்.