Ayurveda

வாதம், பித்தம், கபம் - பாகம் 3

நீங்கள் இந்த கட்டுரையை மிகுந்த ஆர்வத்துடன் படிப்பவராக இருந்தால், இதற்கு முந்தைய இரண்டு கட்டுரையையும் நன்றாக படித்து புரிந்திருந்தால், உங்களுக்கு நான் பிராணாயாமம் பற்றி சொல்லவே தேவையில்லை. ஆனால் நான் ஒன்றை மட்டும் சொல்ல வேண்டும். அஷ்டாங்க யோகத்தின் நான்காவது பகுதியான இந்த பிராணாயாமத்தை பயிற்சி செய்வதற்கு முன்பு ஒவ்வொருவரும் அதற்கு முந்தைய இயமம், நியமம், ஆசனம் ஆகிய மூன்றையும் நன்கு பயின்றிருக்க வேண்டும்.

இயம, நியம விஷயங்களை கடைபிடிக்கும் போது மட்டுமே மனிதன் ஆசனத்தில் அமர தகுதி பெறுகிறான். பிராணாயாமம் செய்யும் நிலையில், நமது மூச்சை அதன் விருப்பத்திற்கு ஓட விடாமல், நம் விருப்பத்திற்கு ஏற்ப நிறுத்தி விட்டு, பின்பு உள்ளிழுக்கும் போது சுவாசம் நமது கட்டுப்பாட்டிற்கு வருகிறது. அப்படி சுவாசத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் முழுமையாக கொண்டுவரும் போது, நினைத்த நேரத்தில் இடகலை நாடியையோ, பிங்கலை நாடியையோ நம்மால் இயக்க, தூண்டிவிட முடியும்.

இப்படி நாடிகளை கட்டுப்படுத்திய ரிஷிகள், ஆண் குழந்தை வேண்டுமெனில் ஆண் குழந்தையையும், பெண் குழந்தை வேண்டுமெனில் பெண் குழந்தையையும், தம் விருப்பத்திற்கேற்ப பெற்றுக்கொண்டார்கள். ஆனால் அந்த விஞ்ஞான விஷயங்கள் எல்லாம் இப்போது நம்ப முடியாத புராணங்கள் ஆகிவிட்டன.

மூலாதாரத்தில் இருக்கும் வாயு யோகத்தின் வழியாக தூண்டப்பட்டு விட்டால், மனிதன் மூலாதார சக்கரத்தின் செயல்பாடுகளான காமத்தின் மீதும், உணவின் மீதும் அதிக ஈடுபாடு கொண்டிருப்பான். அதே பிரபஞ்ச சக்தி, அதாவது அந்த வாயு சுவாதிஷ்டானம் வந்து சேரும் பொழுது, காம ஆசையில் இருந்து விடுபட்டு அந்த மனிதன், சுயமரியாதை மிக்கவனாக, உணர்வுகள் வேலை செய்கிறவனாக, மனிதர்களை தேடுகிறவனாக, ஆக்க பூர்வ உணர்வு கொண்டவனாக மாறிவிடுகிறான்.

அப்படியே அந்த சக்தி, ஆக்ஞா சக்கரத்தை கடந்து, சகஸ்ரார் வந்து சேரும் பொழுது அவனே பிரபஞ்சத்தோடு பிரபஞ்சமாக கலந்து விடுகிறான். வள்ளலார் ஜோதிமயமாக போய்விட்டார் என்று சொல்கிறோமே, அது போல அந்த மனிதன் பிரபஞ்சத்தோடு கலந்து விடுகிறான். ஆனால் மனிதன் மிருகமாகவே இருப்பதும், கடவுளோடு ஒன்றாகி போவதும் இந்த அஷ்டாங்க யோகத்தின் மூலமாகவும், அதில் முக்கியமான வாயுவின் துணையாலும் நடக்கிறது.

மருத்துவத்தை பற்றிய கட்டுரையில் பிராணாயாமமும், ஆன்மீகமும், புராணமும் அதிகமாக வருகிறதே என்று நினைக்க வேண்டாம். இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு விஷயமும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டது. வாத, பித்த, கப நாடிகள் நமது மூச்சோடும், மூச்சு காற்றோடும், அந்த காற்று பிராணாயாமத்தோடும், பிராணாயாமம் யோகத்தோடும், யோகம் ஆன்மீகத்தோடும் தொடர்பு கொண்டது. ஆந்த ஆன்மீகம் புராணத்தின் வழியாக விளக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ துறையில் இருப்பவர்கள், இரண்டு பாம்புகள் இருபக்கமும் இறகுகள் கொண்ட ஒரு குச்சியில் பின்னி பிணைந்திருப்பது போன்ற ஒரு படத்தை தங்களுடைய நிறுவன விளம்பர பலகையிலும், விசிட்டிங் கார்டிலும் பயன்படுத்துகிறார்கள். மருத்துவத்திற்கும் பாம்பிற்கும் என்ன சம்பந்தம்? அதை ஏன் அவர்கள் பயன்படுத்துகிறார்கள்? என்பதை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.