Ayurveda

உலோகம் - தாமிர பற்பம் செய்முறை, பயன்கள்

செம்புப் பொடி ஒரு பங்குக்கு ஆறு பங்கு செம்பருத்தி இலைச்சாறு விட்டு மாலை வரை வெயிலில் வைக்கவேண்டும். இவ்வாறு ஆறு நாட்கள் சாறு விட்டு வெயிலில் காயவைத்து எடுத்து பின் ஏழாம் நாள் முதல் இருநாள் சாறு விடாமல் காய வைத்து எடுக்கவும்.

இதே முறையை வெள்ளாட்டு நீர், செந்நிற பசுவின் நீர் போன்றவற்றிலும் செய்ய வேண்டும். பின்பு பத்து நாட்கள் முள்ளங்கி சாறு ஆறு பங்கு தினமும் விட்டு காய வைக்க வேண்டும். பின்பு இரண்டு நாட்கள் சாறு விடாமல் உலர்த்தி, பின் புதிய மண் சட்டியில் இட்டு லேசான தீயில் வறுத்து, பின் நீரில் கழுவி, துணியில் பிழிந்து, வெயிலில் உலர்த்தி எடுக்க சுத்தியாகும்.

ஒவ்வொரு சாறிலும் காயவைக்க 8+8+8=24 நாட்கள், பின்பு ஒரு 10+2 நாட்கள் மொத்தம் சுத்தி செய்ய மட்டும் 36 நாட்கள் ஆகும். ஒரு வேளை வெயில் போதுமான அளவில் இல்லையெனில் கூடுதல் நாட்கள் காய வைக்கவும் வேண்டும். ஏனெனில் எந்த நீரும் அல்லது சாரும் செம்புப் பொடியில் தங்கக்கூடாது. இல்லையெனில் செம்பு விஷமுள்ளதாகி விடும்.

வேறு ஒரு முறையில் செம்பை மெல்லிய தகடாக தட்டி, சிவக்க காய்ச்சி, கொள்ளுக்குடிநீர், புளியிலைச் சாறு, கற்றாழைச்சாறு, பொன்னாங்காணிச் சாறு, புளித்த மோர் போன்றவற்றில் தனித்தனியே ஏழுதரம் தேய்த்து கழுவ சுத்தியாகும். முதலாவது சொன்ன சுத்தி முறையை காட்டிலும் இது மிக எளிதான முறையை போல தோன்றினாலும், இதிலே இருக்கும் சிக்கல் என்னவென்றால் அடிக்கப்படும் மெல்லிய செம்பு தகடு ஈசல் இறகினை போல மெல்லியதாக இருக்கவேண்டும்.

இவ்வாறு சுத்தி செய்யப்பட்ட செம்புப் பொடி ஒரு பங்குடன், மூன்றரை பங்கு வெற்றிலை சாறு ஒரு நாள் வீதம் சேர்த்து பதினாறு நாட்கள் அரைத்து, வில்லை தட்டி, ஆறு நாட்கள் நிழலிலும், பின் எட்டு நாட்கள் வெயிலிலும் உலர்த்தி, ஒரு நாள் கவசம் உலர்த்தி, அறுபத்தியாறு வறட்டிகளை கொண்டு புடம் போட்டு எரித்து எடுக்க செம்பு பஸ்பமாகும்.

அல்லது சுத்தி செய்யப்பட்ட செம்புப் பொடி ஒரு பங்குடன், மூன்றரை பங்கு முன்னையிலைச் சாறு ஒரு நாள் வீதம் சேர்த்து பன்னிரண்டு நாட்கள் அரைத்து, வில்லை தட்டி, நான்கு நாட்கள் நிழலிலும், பின் ஏழு நாட்கள் வெயிலிலும் உலர்த்தி, ஒரு நாள் கவசம் உலர்த்தி, நாற்பத்தி நான்கு வறட்டிகளை கொண்டு புடம் போட்டு எரித்து எடுக்க செம்பு பஸ்பமாகும்.

அல்லது சுத்தி செய்யப்பட்ட செம்புப் பொடி ஒரு பங்குடன், மூன்றரை பங்கு இலைக்கள்ளிச் சாறு ஒரு நாள் வீதம் சேர்த்து எட்டு நாட்கள் அரைத்து, வில்லை தட்டி, இரண்டு நாட்கள் நிழலிலும், பின் ஐந்து நாட்கள் வெயிலிலும் உலர்த்தி, ஒரு நாள் கவசம் உலர்த்தி, முப்பத்து மூன்று வறட்டிகளை கொண்டு புடம் போட்டு எரித்து எடுக்க செம்பு பஸ்பமாகும்.

அல்லது சுத்தி செய்யப்பட்ட செம்புப் பொடி ஒரு பங்குடன், மூன்றரை பங்கு வன்னியிலைச் சாறு ஒரு நாள் வீதம் சேர்த்து நான்கு நாட்கள் அரைத்து, வில்லை தட்டி, ஒரு நாள் நிழலிலும், பின் இரண்டு நாட்கள் வெயிலிலும் உலர்த்தி, ஒரு நாள் கவசம் உலர்த்தி, இருபத்தி இரண்டு வறட்டிகளை கொண்டு புடம் போட்டு எரித்து எடுக்க செம்பு பஸ்பமாகும்.

இவ்வளவு தூரம் செய்த பின்பும் அறுபத்து ஆறு சதவீதம் செம்பு மட்டுமே பற்பமாகி இருக்கும். பின்பு தினம் இரண்டு பங்கு புன்னை விதை நெய்யில் மூன்று நாட்கள் கருக்கிட நூறு சதவீதம் பற்பமான செம்பு கிடைக்கும்.

வில்லைகளை வெயிலில் காய வைப்பது போல, பனியிலும் காய வைக்க வேண்டும். பஸ்பமான பிறகும் பனியில் வைத்து பூத்தவுடன் எடுத்து பயன்படுத்தவேண்டும். செம்புபொடியை சுத்தி செய்வதில் வெற்றிலையை விட முன்னையிலையும், அதை விட கள்ளியிலையும், அதை விட வன்னியிலையும் பலமானவை.

செம்பு பற்பத்தை கப நோய்களுக்கு நீருடன் சேர்த்தும், வாத நோய்களுக்கு வெந்நீருடன் சேர்த்தும், பித்த நோய்களுக்கு நெய்யுடன் சேர்த்தும் கொடுக்க வேண்டும். இது தவிர வெவ்வேறு அனுபானங்களுக்கு ஏற்ப தலை நோய், கைவலி, பரு மற்றும் கட்டிகள், நடுக்கு வாதம், காய்ச்சல், மறதி போன்ற நோய்கள் குணமாகும்.