Ayurveda

வாதம், பித்தம், கபம் - பாகம் 2

துர்வாசரின் வரத்தை பயன்படுத்தி குந்தி தர்மதேவனின் அவதாரமாக யுதிஷ்ட்ரனை பெற்றுக்கொண்ட பிறகு, எதிர்காலத்தில் அரசனாக போகும் யுதிஷ்ட்ரனை காக்க பலம் வாய்ந்த தம்பியர் பிறக்க வேண்டும் என்று தந்தை பாண்டு நினைக்கிறான்.

அப்போது, "பஞ்ச பூதங்களில் வாயுவே மிகவும் பலமானவன். வாயுதேவன் கோபம் கொண்டால் சமுத்திரம் பாதிக்கப்பட்டு சுனாமி உருவாகும். காட்டின் மரங்கள் பிடுங்கப்படும். வெள்ளத்தின் வேகத்தில் பர்வதங்களும் பாதிக்கப்படும். எனவே நீ வாயுவின் அம்சமாக ஒரு குழந்தை பெற்றுக்கொள்" என்று பாண்டு குந்தியிடம் கூறுவான். அப்படி பிறந்தவனே பீமன்.

ஆம். உண்மையில் பஞ்ச பூதங்களில் வாயுவே பலமானது.

அக்னியே மிக பலமானது, அது அனைத்தையும் தன்னுள் எரித்து செரித்து விடக்கூடியது என்று சிலர் நினைக்கலாம். ஆனால் அந்த அக்னி எரிவதற்கும் வாயுவின் துணை வேண்டும். மேலும் அது அனைத்தையும் தன்னுள் எரித்துவிடும் பொழுது, அது ஆக்க சக்தியாக இல்லாமல் அழிவு சக்தியாகி விடுகிறது.

மனித உடல் பஞ்ச பூதங்களால் ஆனது. அந்த உடல் ஜீவிதத்துடன் நிலைத்திருக்க பிராணன் அவசியம். மனித உடலில் நுரையீரல் மற்றும் இதயத்தில் இயங்கும் பிராணன் என்ற வாயு தவிர மலத்தை வெளியேற்ற அபானன் என்ற வாயுவும், நாபியில் மேல்நோக்கி நிக்கும் உதானன் என்ற வாயுவும், ரத்த ஓட்டத்தை உருவாக்க வியானன் என்ற வாயுவும், உணவை செரித்து சத்துக்களை உடல் முழுவதும் கொண்டு சேர்க்க சமானன் என்ற வாயுவும், கை கால்களை இயக்கவும், விக்கலை உருவாக்க நாகன் என்ற வாயுவும், இமைத்தல் விழித்தலை செய்ய கூர்மன் என்ற வாயுவும், தும்மல் இருமலை உருவாக்க கிருகரன் என்ற வாயுவும், இளைப்பு மற்றும் கொட்டாவியை உருவாக்க தேவதத்தன் என்ற வாயுவும், இறந்த உடலை புதைத்த பின் உடலை வீங்க செய்து வெடிக்க செய்யும் தனஞ்செயன் வாயுவுமாக வேறு ஒன்பது வாயுக்களும் செயல்படுகின்றன. மனித உயிர் வாழ்வில் இந்த வாயுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

எல்லாமே ஒரு வாயுதானப்பா என்று நீங்கள் நினைக்கலாம்.

ஆனால் பிராணன் என்ற வாயு மூக்கின் வழியாக நுரையீரல் வரை இயங்கும் போது, அபானன் என்ற வாயு மலக்குடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற கீழ்நோக்கி இயங்குகிறது. வாயு பொதுவாக மேல்நோக்கி இயங்கும் என்ற அடிப்படையில் அபான வாயுவும் மேல்நோக்கி இயங்கினால் மலத்தை வெளியேற்றுவது கடினம் ஆகிவிடும். இதை கொண்டே நாம் அறிந்துகொள்ளலாம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வாயுக்கள் என்று.

நம்மால் செயற்கையாக தும்மலையோ, விக்கலையோ வரவைக்க முடியாது. தும்முவதை போல நடிக்கலாம். இல்லையெனில் மூக்கினுள் தூசியை போட்டு தும்மலை வரவைக்கலாம். அப்படி வரவைத்தாலும் அதுவும் உடலின் செயல்பாட்டில் இருந்தே வருகிறது. ஏனெனில் அந்த தும்மலும் விக்கலும் தசவாயுக்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.

இந்த தச வாயுக்களும் மூலாதாரமாக இருப்பது நமது மூச்சு காற்றின் வழியே உள்ளேயும் வெளியேயும் இயங்கும் இடகலை பிங்கலை என்ற இரண்டு வாயுக்களே. மேற்சொன்ன பத்தும் கிளைகள் என்றால் இடகலை பிங்கலை இரண்டும் தலைமை அலுவலகம். அந்த இரண்டு வாயுக்களும் நமது ஏழு சக்கரங்களின் வழியாகவும் ஓடி அவற்றை இயக்கி மனிதனை உயிர்வாழ வைக்கிறது.

ஏழு சக்கரங்களும் சக்தி மையங்களாக செயல்பட, இந்த இடகலை பிங்கலை நாடிகள் இரண்டும் அந்த ஏழு சக்கரங்களின் வழியே பயணம் செய்து, அந்த மையங்களை தூண்டி செயல்பட வைக்கும் வாயுக்களாக செயல்படுகின்றன.

பிராணாயாமத்தின் மூலமாக இரண்டு வாயுக்களையும் கட்டுப்படுத்தி, தியானத்தின் மூலமாக ஏழு சக்கரங்களையும் விழிப்படைய செய்ய தெரிந்தவர் திறமையுடன் கூடிய பாக்கியசாலி.