Ayurveda

இரும்புச்சத்தின் முக்கியத்துவம்

இரும்புச் சத்து உடலுக்கு மிகமிக அவசியமானது. இரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் தன்னகத்தே இரும்புச் சத்தை கொண்டது. இந்த ஹீமோகுளோபின்தான் உடலின் பல்வேறு பாகங்களுக்கும் ஆக்சிஜனை ரத்தத்தின் வழியாக கொண்டு சேர்க்கிறது. இரும்பு குறைபாட்டினால் ஹீமோகுளோபின் குறையும். ஹீமோகுளோபின் குறைந்தால் உடலின் செல்களுக்கு சரியான அளவில் ஆக்சிஜன் கிடைக்காது.

குடலில் இருந்து செல்களுக்கு கொண்டு வரப்பட்ட குளுக்கோஸ் இந்த ஆக்சிஜன் மூலம் எரிக்கப்பட்டு, அதில் இருந்து கிடைக்கும் சக்தி செல்கள் செயல்பட உதவுகிறது. எவ்வளவு தூரம் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறதோ அவ்வளவு தூரம் மனிதனுடைய செல்கள் இறக்கும்.

மனிதனுடைய உயிர் தண்டுவடத்தின் ஒரு பகுதியில் இருப்பதாக நவீன மருத்துவம் சொல்கிறது. ஆனால் உண்மையில் உடலில் இருக்கும் எல்லா செல்களிலும் மிகச் சிறிய அளவு மனித உயிர் இருக்கிறது. அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய மனித உயிராக இருக்கிறது. வெளியில் இருக்கும் நெருப்பு மட்டுமல்ல, மனித செல்களில் இருக்கும் நெருப்பு எரிவதற்கும் ஆக்சிஜன் துணை தேவை. அந்த ஆக்ஜிசனை நீர்பொருளான ரத்தத்தின் வழியாக இந்த இரும்பு அயனிகள்தான் கொண்டு சேர்க்கின்றன.

இரும்புச்சத்து குறைபாட்டினால் மனிதன் சக்தியற்று படுத்து விட்டால், பிறகு அவனுக்கு இரும்புச்சத்து, அயபற்பமாகவோ, அல்லது செந்தூரமாகவோ மட்டுமே தரப்பட முடியும். அயபற்பம் மற்றும் அயச்செந்தூரத்தில் இரும்பு (Fe) எரிக்கப்பட்டு இரும்பு ஆக்சைடாக (Fe2O) மாற்றப்பட்டு இருக்கிறது. அதை நாம் நேரடியாக உட்கொள்ளும்போது, ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் மூலக்கூறுகளுக்கு தேவையான இரும்பு உடனடியாக கிடைக்கிறது.

மனிதன் இரும்புச்சத்து நிறைந்த உணவுப்பொருட்களை வழக்கமாக உணவில் கொண்டிருந்தால், இந்த அனீமியா நிலைக்கு போக வேண்டியதில்லை. ஒரு ஆரோக்கியமான மனிதனுக்கு 13mg க்கு மேல் ஹீமோகுளோபின் இருக்க வேண்டும். இருப்பினும் 10mg க்கு கீழ் குறைவது ஆபத்து.

இயற்கையில் இரும்புச்சத்து மீன்கள், கீரைகள், இறைச்சி, சுண்டல், பூசணிவிதை, ப்ராக்கோலி, சோயா பீன்ஸ், சிறு பருப்பு, உலர் திராட்சை, பீட்ரூட், கேரட், மாதுளம்பழம், தர்பூசணி, புதினா, கொத்தமல்லி, அத்திப்பழம் போன்றவற்றில் அதிகமாக இருக்கிறது. இது போல இன்னும் பல உணவுப்பொருட்களிலும் இரும்புச்சத்து இருக்கிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு 12mg க்கு கீழ் குறைந்தால் சாதாரண முறையிலோ அல்லது சிசேரியன் முறையிலோ குழந்தை பெறுவதற்கு மருத்துவர் ஒத்துக்கொள்ளவே மாட்டார். உடனடியாக ரத்தம் ஏற்ற வேண்டும் என்பார்.

தாவர வகைகளில் பீட்ரூட், உலர் திராட்சை, மற்றும் முருங்கைக் கீரை உடனடியாக நமது இரும்புச்சத்து அளவை கூட்டும் தன்மை கொண்டது. இவற்றை ஒரு வாரம் தினமும் உணவில் சேர்த்து கொண்டாலே நம் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைத்துவிடும்.

இதைவிட அதிகமான இரும்புச்சத்து இறைச்சியில், அதுவும் குறிப்பாக ஆடு கோழி போன்ற விலங்குகளின் உடல் உள்ளுறுப்புகளான இதயம், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம், மற்றும் ரத்தம் போன்றவற்றில் அபரிமிதமாக இருக்கிறது. சுவரொட்டி என்று சொல்லப்படும் ஆட்டு மண்ணீரலில் 50mg என்ற அளவில் இரும்புச்சத்து இருக்கிறது. இது முருங்கைக்கீரையில் இருப்பதை விட 10 மடங்கு அதிகம். பீட்ரூட்டில் இருப்பதை விட 20 மடங்கு அதிகம்.

மூன்றே மூன்று சுவரொட்டி சாப்பிட்டாலே, 8mg க்கு கீழ் சென்று விட்ட ரத்த ஹீமோகுளோபின் அளவு 12க்கு வந்து விடும். இதற்கு இணையாக ஆட்டு ரத்தத்தில் அதிகமாக இரும்புச்சத்து இருக்கிறது. தினமும் சில காய்கறி வகைகளை கண்டிப்பாக உணவில் சேர்த்து கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தால், அசைவ உணவுகள் மூலம் கிடைக்கும் அபரிமிதமான இரும்புச்சத்தை நாம் எதிர்பார்க்க தேவையில்லை.