Ayurveda

உலோகம் - செம்பு, தாமிரம்

சித்தமருத்துவத்தில் பயன்படுத்தப்படும் உலோகங்களில் ஒன்று செம்பு. தங்கம், வெள்ளி, வெள்ளீயம், காரீயம், நாகம், இரும்பு, கந்தகம் போன்ற மற்ற உலோகங்களுடன் கலந்தும், தனியாகவும் செம்பு பூமிக்கடியில் இருந்து கிடைக்கிறது.

சிவப்பு நிறமாகவும், ஒளிரும் தன்மையுடனும், காற்றில் உள்ள ஈரத்தன்மையுடன் வினைபுரிந்து நிறம் மாறும் குணத்தையும் கொண்டது செம்பு. மாசற்ற செம்பை எளிதில் கத்தி கொண்டு வெட்ட முடியும். வெப்பத்தையும், மின்சாரத்தையும் கடத்தும் தன்மை இதற்கு அதிகமாக உண்டு.

உதும்பரம், ரவி, ராசி, எருவை, சீரணம், தாமிரம், பரிதி, விடம் போன்ற வேறு பெயர்களும் இதற்கு உண்டு. அயம், தங்கம், நாகம் இவை மூன்றும் செம்பின் நட்புச்சரக்குகள். காரீயமும், வெடியுப்பும் இதன் பகைச்சரக்குகள் ஆகும்.

செம்பு கார்ப்பு மற்றும் கைப்புச் சுவையையும், உஷ்ண வீரியமுடனும், வறட்சி உண்டாக்கியாகவும், உடல் தேற்றியாகவும் செயல்படக்கூடியது. செம்பு, இரும்புடன் சேர்ந்து ரத்த சிவப்பணுக்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் இருக்கும் பிரதான ஆக்சிஜனேற்ற தடுப்பானாகவும், எலும்புகளின் உருவாக்கத்திலும், நரம்பு மண்டல செயல்பாடுகளிலும் செம்பு முக்கிய பங்கு வகிக்கிறது.

செம்பு குறைபாட்டினால் கண்பார்வை குறைபாடுகள், நரம்பு மண்டல கோளாறுகள், மூளை சார்ந்த பிரச்சனைகளான அல்சைமர் போன்றவை வர வாய்ப்பிருக்கிறது. செம்பு மின்சாரத்தை கடத்தும் கடத்தியதாக பயன்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம். ஆனால், நரம்பு மண்டலத்தில் வழியாக செல்லும் நம் உடல் மின்சாரத்தை கடத்துவதற்கு செம்புதான் பயன்படுகிறது.

செம்பு குறைபாட்டினால் ரத்தபித்தம், சன்னி, கல்லீரல் நோய்கள், கபம், மந்தம், புண்கள், கிருமிகள், தாது நஷ்டம் போன்ற பல பிரச்சனைகள் நீங்கும். வயிற்றுவலியை நீக்குவதில் செம்புக்கு நிகர் எதுவுமில்லை.

செம்பு குறைந்தால் எப்படி பிரச்சனைகள் வருமோ, அதற்கு நிகரான அல்லது அதை விட அதிகமான பிரச்சனைகள் அது உடலில் கூடினாலும் வரும். ஆகையால் செம்பை கொண்டு மருந்துகள் செய்யும் ஒருவர் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும். செம்பு இருபுறமும் பளபளப்பாக இருக்கும் ஒரு கைப்பிடியில்லாத கத்தி போன்றது.

கண் நோய்கள் அனைத்திற்கான மருந்துகளையும் செம்பு கொண்டு செய்ய முடியும் என்று சித்தர் ஏடுகள் கூறுகின்றன. கண் மருந்துகள் இடுவதற்கு பயன்படுத்தப்படும் அஞ்சனக்கோல், கண் மருந்துகள் அரைக்கும் கல்வம் மற்றும் காது குத்தும் ஊசி போன்றவை செம்பினால் செய்யப்பட்டவை ஆகும்.

சுத்தி செய்யப்பட்ட செம்பில் இருந்து செம்பு பற்பம், மற்றும் செந்தூரம் செய்யப்படுகிறது. சிறப்பாக செய்யப்பட்ட செம்பு பற்பம், வேகத்தில் பாசுபதாஸ்திரம் போன்றது, வன்மையில் சஞ்சீவி மூலிகை போன்றது, வாக்கு திறத்தில் ஆதித்ய சிந்தாமணி போன்றது, உபகாரத்தில் அமுதம் போன்றது என்று பல சித்தர் நூல்கள் கூறுகின்றன. செம்பின் களிம்பு நீக்கும் முறையும், பற்பம் செய்யும் முறையும், அதை சிறப்பான முறையில் பத்தியத்துடன் உண்ணும் முறையும் எவன் அறிகிறானோ அவன் மார்க்கண்டேயனை போல வாழலாம் என்று சித்தர் பாடல்கள் சொல்கின்றன.