Ayurveda

கந்தகம் மற்றும் அதன் பாஷாணங்கள்

சித்த மருத்துவத்திலும், ஆயுர்வேதத்திலும் பல உலோகங்கள் பஸ்பம், செந்தூரம், சுண்ணம் என்ற மருந்துகளாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. அதற்கு காரணம் அந்த உலோகங்களை அப்படியே உலோகங்களாக நம் உடலால் செரிக்க முடியாது. எனவே அவை உப்புக்களாக, பஸ்பமாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. அதில் ஒன்று கந்தகம். கந்தகம் பல்வேறு பாஷாணங்களின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

எந்த பொருளுடன் சேர்ந்தாலும், அந்த பொருளை வெட்டை தன்மை கொண்டதாக, நீரை உறிஞ்சும் குணம் கொண்டதாக, எரிக்கும் சக்தி கொண்டதாக, அனலை காக்கும் சேர்மமாக மாற்றி விடக்கூடியது கந்தகம். கந்தகத்தை தன்னுள்ளே கொண்ட பாஷாணங்களும் அப்படிப்பட்டவையே. தாளகம், மடல் அரிதாரம், சிவந்த அரிதாரம், குதிரைப்பல் பாஷாணம், சவ்வீரம், அஞ்சனக்கல், லிங்கம், துருசு, மடல் துத்தம், பால் துத்தம் போன்றவையும், இன்னும் பல பாஷாணங்களும் கந்தகத்தை தன்னுள்ளே கொண்டவை.

கந்தகம் சார்ந்த எந்த ஒரு பாஷாணத்தையும் வைத்து மருந்து செய்யும் பொழுது, முதலில் அதன் வெட்டைத்தன்மை குறைக்கப்பட வேண்டும். அப்படி வெட்டைத்தன்மை குறைக்கப்படும் பொழுதும் மருத்துவகுணம் பாதிக்கப்படாமல் இருக்கவேண்டும்.

கந்தம் என்றால் வாசனை. மச்சகந்தி என்றால் மீன் வாசனை கொண்ட என்று பொருள். கந்தகம் என்ற சொல்லுக்கு "கடுமையான நெடி கொண்ட" என்று பொருள். கந்தகம் இயல்பிலேயே அழுகிய முட்டையை போல வாசனை கொண்டது. கந்தகமும், அது சார்ந்த சேர்மங்களும் இன்றைய ஆப்கானிஸ்தான் மலைகளில் ஒருகாலத்தில் அதிகம் வெட்டி எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதை கொண்டு காந்தாரம் என்ற பெயர் அந்த நாட்டிற்கு மஹாபாரத காலத்தில் வந்திருக்கலாம். இப்போது கூட ஆப்கானிஸ்தானில் கந்தகமும் அதன் சேர்மங்களும் அதிகம் வெட்டியெடுக்கப்படுகின்றன. அப்படியே அந்த கந்தகம் அந்த பூமியை வறண்ட பூமியாக்கியிருக்கிறது.

கந்தகத்தை கொண்டு குஷ்டம், கல்லீரல் பிரச்சனைகள், வீக்கம், பெருவயிறு, குன்ம வாயு, நாட்பட்ட மேக நோய்கள், விஷக்கடிகள், தோல் நோய்கள், கபம், சுரம் போன்றவற்றை குணமாக்கலாம். மேலும் இது உடல் கிருமிகள், சொறி, சிரங்கு, நாட்பட்ட மூட்டுவலி போன்றவற்றையும் நீக்குகிறது. இது தனிப்பட்ட கந்தகத்தை மருத்துவ பயன்கள் என்றால், கந்தகம் சேர்ந்த பாஷாணங்களின் பயன்களும் இந்த வகையிலேயே இருக்கின்றன.

கந்தகத்தை பாஷாணங்களான, லிங்கம் சுரம், சன்னி, கிரந்தி, கரப்பான் போன்ற வியாதிகளுக்கும், தாளகம் சுவாசகாசம், சுரம், விஷம், தோல் வியாதிகளுக்கும், சிவந்த அரிதாரம் விஷம், சுரம், தோல் வியாதிகளுக்கும், துருசு கண் நோய் மற்றும் தோல் பிரச்சனைகளுக்கும் மருந்தாக பயன்படுத்த படுகிறது. ஆக, கந்தகமும் அது சார்ந்த மற்ற பாஷாணங்களும் இயல்பாக தோல் வியாதிகளுக்கும், விஷக்கடிகளுக்கும் மருந்தாக அமைகின்றது. தோல்வியாதிகள் கூட உடம்பில் சேருகின்ற எதோ ஒரு விஷத்தினால் உருவாகின்றவையே.

கந்தகம், தனிப்பட்ட தன்னுடைய குணத்தில் வெட்டைதன்மை கொண்டதாக, கடும் நெடி கொண்டதாக, எரிக்கும் குணம் கொண்டதாக இருந்தாலும், மற்ற பொருள்களோடு சேர்ந்து இருக்கும் பொழுது, பாஷாணங்களாக இருக்கும் பொழுது இத்தனை தூரம் உயர்ந்த மருந்தாக, கடுமையான நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டதாக இருக்கிறது. ஆனால் அது அதை முறையாக சுத்தி செய்து, சரியான வழிமுறைகளின் மூலம் மருந்து தயாரிக்க தெரிந்த வைத்தியரின் மூலம் செய்யப்பட வேண்டும்.