Ayurveda

வாதம், பித்தம், கபம் - பாகம் 4

மருத்துவ சின்னமாக பெரும்பாலான மருத்துவர்களாலும், மருந்து தயாரிக்கும் நிறுவனங்களாலும் பயன்படுத்தப்படும் இந்த சின்னத்தை பாருங்கள். நடுவில் செங்குத்தாக இருக்கும் ஒரு தடியை இடமும் வலமுமாக சுற்றி வரும் இரண்டு பாம்புகளும், மேலே இரண்டு இறக்கைகளும் இருக்கின்றன. காடூசியஸ் (Staff of Hermes) என்று அழைக்கப்படும் இந்த சின்னம் கிரேக்க புராணத்தில் மருத்துவத்தை குறிக்கிறது என்று பலரால் நம்பப்படுகிறது.

கிரேக்க புராணத்தில் ஹெர்மீஸ் என்ற கடவுளின் கைத்தடியாக இதை போன்ற ஒரு சின்னம் இருக்கிறது. இந்த ஹெர்மீஸ் நமது இந்திய புராணத்தில் வரும் புதனுக்கு ஒப்பானவர். இந்த சின்னத்தில் இருக்கும் தடி சக்தியையும், பாம்புகள் புத்திசாலித்தனத்தையும், இறக்கைகள் விடாமுயற்சியையும் குறிப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த சின்னம் பற்றிய விளக்கத்தில் எங்கேயும் மருத்துவம் சார்ந்த விஷயம் சொல்லப்படவில்லை. மேலும் அந்த ஹெர்மீஸ் என்ற கடவுளும் தூதுவர்கள், பேச்சாளர்கள், திருடர்கள், பயணிகள், வியாபாரிகள் போன்றவர்களை குறிப்பவராக இருக்கிறார்.

மருத்துவம் சார்ந்து பயன்படுத்தப்படும் மற்றொரு சின்னம் அஸ்கலப்பியஸின் தடி (Rod of Asclepius) என்றழைக்கப்படும் இந்த சின்னமாகும். இது ஒரு தடியில் ஒரு பாம்பு சுற்றி சுற்றி இருக்கும்படியாக உள்ளது. இந்த சின்னம் WHO போன்ற மிகப்பெரிய நிறுவனத்தால் கூட பயன்படுத்தப்படுகிறது. கிரேக்க புராணத்தில் சொல்லப்படும் அஸ்கலப்பியஸ் என்ற இந்தக் கடவுள் மருத்துவத்தை குறிக்கிறவர். அந்த வகையில் இந்த சின்னம் மருத்துவத்தை குறிக்கும் சரியான சின்னம்.

2014இல் வெளியான ஒரு மருத்துவ ஆராய்ச்சி நிறுவன கட்டுரையின் படி மருத்துவத்துறையில் இருக்கும் 95% பேருக்கு சரியான மருத்துவ சின்னம் காடூசியஸ் அல்ல, அஸ்கலப்பியஸின் தடி தான் என்ற தெளிவு இல்லை. பலர் தவறான சின்னத்தையே பயன்படுத்தி இருந்தனர் அல்லது சரியான புரிதல் இன்றி இருந்தனர். இந்த அஸ்கலப்பியஸின் தடி உலக சுகாதார நிறுவனம் மட்டுமல்லாது, அமெரிக்க மருத்துவ அமைப்பு, கனடா மருத்துவ அமைப்பு, மற்றும் அமெரிக்க கால்நடை மருத்துவ அமைப்பிலும் சின்னங்களாக பயன்படுத்தபடுகிறது.

அந்த வகையில் பார்க்கும் பொழுது, மேல்நாட்டு வழிவந்த அலோபதி மருத்துவத்திற்கும் காடூசியஸ் சின்னத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை அல்லது சம்பந்தம் இருப்பதாக நினைப்பது ஒரு தவறான புரிதல் என்பது தெளிவாகிறது.

இந்த காடூசியஸ் சின்னத்தின் நவீன கால வரலாறு இப்படியாக இருக்க, இந்த சின்னம் எப்படி தோன்றியது என்பது குறித்த பழங்கால வரலாறு இந்திய சித்தமருத்துவ பாரம்பரியத்துடன் தொடர்புள்ளதாக இருக்கிறது. காடூசியஸ் சின்னத்தில் இருக்கும் பின்னிப்பிணைந்த பாம்பின் தோற்றம் கிரேக்க நாகரிகத்தில் மட்டுமல்ல, இந்திய நாகரிகத்திலும் தொன்று தொட்டு இருக்கிறது. பாம்பு ஆதிகாலத்தில் இருந்தே நமது நாட்டில் வழிபடப்படும் தெய்வமாக இருக்கிறது. சிவனிடம் வாசுகியாகவும், விஷ்ணுவிடம் ஆதிசேஷனாகவும் பாம்பே நம் மக்களால் வழிபடப்படுகிறது.

பாம்பை வணங்கும் முறை அதன் மேலிருந்த பயத்தால் அல்லது தன்னைத்தானே மீளுருவாக்கம் செய்து கொள்ளும் தன்மை மீதான ஆச்சரியத்தால் ஏற்பட்டிருக்கலாம். இந்த பழக்கம் இந்தியா மட்டுமல்லாது உலகின் பிறபகுதிகளிலும் தானே தோன்றியிருக்கலாம். அதனால்தான் இப்படி இந்திய நாகரிகத்திலும், கிரேக்க நாகரிகத்திலும் பாம்பு முக்கிய இடத்தை பெற்றிருக்கும். சரி, இவை அனைத்திற்கும் சித்த மருத்துவத்திற்கும் என்ன சம்பந்தம் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.