Ayurveda

காட்டுக்கருணையும் மூலமும்

காட்டுக்கருணை என்பது கருணை கிழங்கின் ஒரு வகை. நாம் வீட்டு சமையலில் பயன்படுத்தும் பிடி கருணையே அதிக கார்ப்பு தன்மை கொண்டது. புளி அதிகம் சேராமல் குழம்பு வைத்துவிட்டால், நாக்கு அதிகம் அரிக்கும். ஆனால் காட்டுக்கருணை அதைவிட அதிக கார்ப்பு தன்மை கொண்டது.

காடுகளிலும், மலைகளிலும் பயிராகக்கூடிய ஒருவகை கொடி இது. கொஞ்சம் அரிதானது. அதிக வெப்பத்தன்மை கொண்ட இந்த கிழங்கு மூலத்திற்கு சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. வாதம், பிரமேகம், சுரதோஷம் போன்றவற்றை சரிப்படுத்தும் தன்மை கொண்டது. அதிக பசியை உண்டாக்க கூடியது.

இதனை நாட்டுக்கருணையை போல சமைத்து உண்ணலாம். வேலை கொஞ்சம் அதிகம். அதற்கு முதலில் காட்டுக்கருணை கிழங்கை புளிய மரத்து இலைகளுடன் நன்றாக வேகவைக்க வேண்டும். இப்பொழுது கொஞ்சம் கரகரப்பு தன்மை போய் விடும். அதற்கு பிறகு கருணைக்கிழங்கை போல சமைக்க வேண்டும். அப்போதும் அதிக புளி சேர்த்துக்கொள்ள வேண்டும். இது மூலத்திற்கு தலைசிறந்த மருந்து.

கிழங்கு தவிர, இந்தக் காட்டுக்கருணையின் தண்டிலும் இதே வகையான மருத்துவ குணங்கள் இருக்கிறதாம். அதிலேயும் இந்த அளவு கார்ப்புத்தன்மை இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் அதையும் நாம் கறியாக சமைத்து உண்ணலாம். கிழங்கு எல்லா நேரங்களிலும் நாம் உணவாக கொள்ள முடியாது. எனவே தண்டை பயன்படுத்தலாம்.

பொதுவாக கிழங்கு வகைகளில், கிழங்கின் தோலில் கொஞ்சம் நச்சுத்தன்மை இருக்கும். அதனால் எந்த கிழங்காயினும் தோலை நீக்கிவிட வேண்டும். மேலும் கருணைக்கிழங்கு போன்றவற்றை ஒரு நான்குநாள் வெயிலில் காயவைத்தால், சில கிழங்குகள் நீர்வற்றி அதிகமாக சுருங்கிவிடும். வேறுசில அழுகிவிடலாம். ஆனால் அந்த வெயிலையும் தாங்கக்கூடிய கிழங்குகளே சாப்பிட உகந்தவை. சிறந்தவை.

கண்ணுசாமி பிள்ளையின் மூலிகை வைத்தியத்தில், காட்டுக்கருணை, காராகருணை, பிடிக்கருணை என்ற மூன்று கருணையையும் வைத்து, வேறு சில பொருட்களையும் சேர்த்து கருணை லேகியம் என்ற ஒரு சித்த மருந்தை இன்று பல மருந்துக் கம்பெனிகள் தயாரித்து விற்கின்றனர். இது எல்லா வகையான மூலத்தையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது.