Ayurveda

மருந்து செய் இயந்திரங்கள் - பாகம் 1

மருந்து செய்முறையில் அம்மி, கல்வம் போன்ற சிறு கருவிகளோடு, வேகவைப்பதற்கும், நெய் எடுப்பதற்கும், புடம் போடுவதற்கும் கொஞ்சம் சிக்கலான இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

1. அவியந்திரம்

வாய் பொருந்தக்கூடிய இரண்டு பானைகளை எடுத்துக்கொண்டு, அவற்றில் ஒரு பானையை அடுப்பில் வைத்து, தேவையான செயநீர் அல்லது தண்ணீரை பானையில் ஊற்றி, அதன் வாயை பருத்தி துணியால் மூடி கட்டி, அந்த மூடியில் அவிக்க வேண்டிய பொருளை வைத்து, மேலே இரண்டாவது பானையை கவிழ்த்து மூடி வைத்து, உள்ளிருந்து வரும் நீராவி வெளியே போகாதவாறு பானைகளின் விளிம்பை ஈரத்துணியால் மூடி, பானையில் உள்ள நீர் நான்கில்

ஒன்றாக சுருங்கும் வரை சிறு தீயாக எரிக்க வேண்டும். பின்பு பானை ஆறியதும் அவித்த சரக்கை எடுத்து ஆற வைக்கவும்.

கிட்டத்தட்ட இட்லி அவிப்பது போன்ற ஒரு வழிமுறை தான். சில நேரங்களில் மட்டும், மூடியை வெறும் ஈரத்துணியால் மூடாமல், சீலை மண் செய்து மூடவேண்டும். சீலை மண் செய்யும்போது இரண்டு நீராவி முழுவதுமாக உள்ளே தங்கி விடும். இந்த இயந்திர அமைப்பு கிட்டத்தட்ட ஒரு பிரஷர் குக்கர் போன்ற அமைப்பாக மாறிவிடும்.

2. துலாயந்திரம்

சரக்கை பருத்தி துணியில் முடிந்து, அதை ஒரு கயிற்றில் கட்டி, மண்பானையில் உள்ள செயநீரில் லேசாக படும்படியாக, பானையின் வாய்ப்பகுதியில் வைக்கப்பட்ட ஒரு மரக்கட்டையில் கயிற்றின் மறுமுனையை கட்டி தொங்க விட வேண்டும். பின்பு பானையை மூடி, நீர்ப்பொருள் நன்றாக வற்றும் வரை எரிக்கவும்.

நேர்வளம், சேரான்கோட்டை, பூரம் போன்ற ஒரு சில சரக்குகள் செயநீரில் மூழ்கவைத்தும், வீரம் போன்ற ஒரு சில சரக்குகள் செயநீரில் படாமல் நீராவி மட்டும் படும்படியாகவும் வேகவைக்கப்படவேண்டும்.

3. தூப இயந்திரம்

அவியந்திரம் போன்ற அமைப்புதான் தூப இயந்திரமும். ஆனால் சிறு வித்தியாசம். அவியந்திரத்தில் செயநீர் அல்லது ஏதாவது ஒரு நீர்பொருள் பானையில் ஊற்றப்பட்டு அதனுடைய ஆவியால் சரக்கு பக்குவமாக வேகவைக்கப்படும். ஆனால் தூப இயந்திரத்தில், செயநீருக்கு பதிலாக கோரைக்கிழங்கு, பூலாங்கிழங்கு, சாம்பிராணி போன்ற தூப சரக்குகள் வைக்கப்படும். அதாவது புகைவரும் சரக்குகள் .

பின்பு அடுப்பேற்றி எரிக்கும்போது, தூபச்சரக்கினால் வரும் புகை கொண்டு துணியாலான மூடியில் உள்ள தூபமிடப்படும் சரக்கு பக்குவமாக வேகவைக்கப்படும்.

4. மெழுகுத் தைல இயந்திரம்

கழுத்து நீண்ட, ஒரு பக்கம் விரல் நுழையும் படியாக துளையிடப்பட்ட பெரிய பானையும், அதன் வாய்ப்பகுதியில் சரியாக பொருந்தும்படியான கழுத்து நீண்ட, ஒரு பக்கம் விரல் நுழையும் படியாக துளையிடப்பட்ட ஒரு சிறிய பானையும் எடுத்துக்கொண்டு, பெரிய பானையின் பக்கத்துளை மேல்நோக்கி இருக்குமாறு அதை சாய்வாக ஒரு அடுப்பில் வைத்து, அதன் வாய்ப்பகுதியில் சிறிய பானையை மூடியை போல வைத்து ஏழு முறை ஒன்றன்மேல் ஒன்றாக சீலைமண் செய்து மூடவேண்டும். சிறிய பானையின் பக்கத்துளை கீழ்நோக்கி இருக்கவேண்டும்.

சிறிய பானையின் பக்கத்துளையின் கீழ் தைலம் சேகரிக்க ஒரு பாத்திரத்தை வைக்க வேண்டும். பெரிய பானையில் நான்கில் ஒரு பங்கு அளவே இருக்கும்படியாக சிறிய பானை இருக்கவேண்டும். பெரிய பானையில் தைல சரக்கை இட்டு, பானையின் மேலே இருக்கும் சிறுதுளையை ஒரு ஓட்டினால் மூடி, சாணியை அதன் மேல் அப்பி வைக்க வேண்டும். ஏனெனில் ஆவி வெளியே போகக்கூடாது.

சிறிய பானையில் கீழ்நோக்கி ஒரு துளை இருக்கிறதல்லவா. அந்த துளை வழியாக குச்சிகளை செருகி அந்த குச்சிகளின் பலத்தில் பானை நிற்கும்படியாக, அல்லது வேறு ஒரு மேஜை போன்ற அமைப்பை செய்து சிறிய பானை கீழே விழாமல் இருக்க வைக்க வேண்டும்.. குச்சிகள் எப்போதும் அவசியம். குச்சிகளின் அடியில் தைலம் சேகரிக்க ஒரு பாத்திரத்தை வைக்க வேண்டும்.

சிறிய பானையை குளிர்விக்க அதன் மேல் ஈரத்துணியை போட வேண்டும். ஈரம் காய்ந்தால் வேறு துணி மாற்றவேண்டும். அடுப்பு எரிக்க எரிக்க, பெரிய பானையில் இருக்கும் தைலம் சரக்குடன் சேர்ந்து ஆவியாகி, சிறிய பானைக்கு வரும். அப்போது அது கொஞ்சம் குளிர்ந்து மீண்டும் தைலமாகி, குச்சிகள் வழியாக தைலம் சேகரிக்கும் பாத்திரத்தில் வந்து சேரும். தைலத்துடன் சேர்ந்து கொஞ்சம் தைலம் சார்ந்த புகையும் வரும்.

தைல புகை அடுப்பிலிருந்து வரும் புகையுடன் சேரக்கூடாது. அதற்காகவே கழுத்து நீண்ட பானை என்று சொல்லி இருக்கிறார்கள். ஒருவேளை தைலப்புகை, அடுப்பு புகையுடன் சேர்ந்தால் தீப்பற்றி, பானை வெடித்து, மருந்து தயாரிப்பவர் மீது தீ பற்ற வாய்ப்புள்ளது.