Ayurveda

மருந்துகளின் அளவைகள்

பொதுவாக சூரணம், லேகியம் போன்ற மருந்துகளை ஒருவருக்கு இந்த அளவில் கொடுக்கவேண்டும் என்று சித்த மருத்துவ நூல்களில் குறிப்பிட்டிருப்பார்கள். அவை பெரும்பாலும் கிராம், அல்லது மில்லி லிட்டர் என்று நமக்கு புரிந்த மொழியில் இருக்காது. சித்தர்கள் காலத்தில் மனிதர்கள் பயன்படுத்திய அளவைகளில் கொடுக்கப்பட்டிருக்கும்.

அதன்படி உளுந்தெடை, வராகன் எடை, குன்றி, பலம் என பல அளவுகள் உண்டு. அவற்றை நாம் கிராம், மில்லி என்ற அளவுகளில் மாற்றி புரிந்து கொள்ள வேண்டும். நெல் என்பது மிகச்சிறிய அளவு. சுமார் 32.5 மில்லி கிராம். அதிலிருந்து அடுத்தடுத்த அளவுகளை நாம் கணக்கெடுத்துக்கொள்ள வேண்டும்.

1 உளுந்து - 2 நெல் (65 மில்லி கிராம்)

1 குன்றி - 2 உளுந்து ( 130 மில்லி கிராம்)

குன்றி என்பது குன்றிமணியைத்தான் குறிக்கிறது. இது முந்தைய காலத்தில் தங்கம், வெள்ளிக்கு நிகரானது. இன்றும் கூட சில கிராமத்து தாய்மார்கள் தங்கள் பிள்ளைகள் மிகவும் சிறந்தவர்கள் என்பதை குறிக்கும்விதமாக, "என் பிள்ளை குன்றிமுத்து மாதிரி, குப்பையில் கிடந்தாலும் குன்றிமுத்துக்கு மவுசு உண்டு" என்று கூறுவார்கள்.

1 மாஞ்சாடி - 2 குன்றி ( 260 மில்லி கிராம்)

1 வராகன் எடை - 32 குன்றி ( 4.16 கிராம்)

1 கழஞ்சு - 40 குன்றி( 5.1 கிராம்)

1 பலம் - 10 வராகன் எடை (41 கிராம்)

ஒரு பலம் என்பதற்கு சில நூல்களில் 35 கிராம் என்ற அளவும், வேறு சில நூல்களில் 41 கிராம் என்ற அளவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 32 குன்றி ஒரு வராகன், 10 வராகன் ஒரு பலம் என்ற கணக்கில் கொண்டால் 41 கிராம் என்ற அளவே வரும்.

வேறு ஒரு அளவீட்டு முறையில்

180 உளுந்து எடை - 1 தோலா (11.7 கிராம்)

3 தோலா - 1 பலம் (35.1 கிராம்)

என கணக்கிடப்பட்டு 35 கிராம் சொல்லப்பட்டிருக்கிறது.

இவை தவிர இன்னும் பல நிறுத்தல் அளவுகள், முகத்தல் அளவுகள் முன்பு பயன்படுத்தப்பட்டன. ஆனால் அவற்றுள் பெரும்பாலானவை தற்போது வழக்கில் இல்லை.